"நீயா பேசியது?"
அவ என் அப்பாவோட நண்பரின் மகள். என் வயதுதான். அவளும் நான் படிக்கும் அதே வகுப்பு ஆனால் அவள் பெண்கள் பள்ளியில் நான் ஆண்கள் பள்ளியில். ஊரில் இரண்டே இரண்டு பள்ளிகள்தான். ஒண்ணு கிழக்கால இன்னொண்ணு மேக்கால. பருவம் வரும் வரை அவள் தோற்றம் சாதாரணமாகத்தான் இருந்தது. பின்பு நல்ல மாற்றம் அவளோட தோற்றத்துல. நடிகை சாரதா மாதிரி இருப்பா. நெறம் மட்டும் அவ்வளோ கருப்பு இல்லாம மாநிறம்.
அதுவரைக்கும் அவளை சட்டை செய்யாத எங்க பசங்க அவளை தொடர ஆரம்பிச்சாங்க. அவ ஒரு விநாயகர் கோவில் வழியாதான் ஸ்கூலுக்கு போகணும். பசங்க அங்க சாமி கும்பிடறா மாதிரி வெயிட் செய்வாங்க. அவ வந்ததும் அவ பின்னாடியே போயி ஸ்கூல் வரைக்கும் விட்டுட்டு வருவாங்க. அவ யாரையும் சட்டை செய்ய மாட்டா. அவ உண்டு அவ வேலை உண்டுன்னு இருப்பா. சில சமயம் அவ லேட்டா வந்தா பசங்களுக்கும் லேட்டாயிடும், ஓடி வந்து பி டி மாஸ்டர்கிட்ட அடிவாங்கிக்கிட்டு கிளாசுக்கு வருவாங்க, அதுலயும் ஒரு சந்தோஷம் அவங்களுக்கு, என்னமோ அவளுக்காக உயிரையே கொடுத்தா மாதிரி. என்னோட நண்பன் இன்னொருத்தன், போட்டி ஜாஸ்தி இருக்கறதால ஸ்கூல்வரை போகாம காலைல சீக்கிரம் கெளம்பி அவ வீட்டு வழியா ஸ்கூலுக்கு வருவான், அவ கண்ணுல படறாளான்னு பாக்க, அதே மாதிரி சாயந்திரம் கொஞ்சம் லேட்டா ஸ்கூலை விட்டு கெளம்பி அவ வீட்டு வழியா வீட்டுக்கு வருவான், எப்படியும் தினமும் ஒருவாட்டியாவது தரிசனம் கிடைச்சுடும்.
அவங்க அப்பா ஒரு பெரிய லாயரோட சொந்தக்காரர், அவர் கிட்ட உதவியாளாரா இருந்தாரு. அதுனால எங்க அப்பாவை சில கேஸ் விஷயமா பாக்க வருவாரு. நல்ல உயரம். அந்தக்காலத்துலேயே பேண்ட் போட்டு ஷர்ட்டை டக் இன் செஞ்சுட்டுதான் வருவாரு. இந்தப் பொண்ணும் அவர் மாதிரியே உயரம்.
சில சமயம் எங்க அப்பா ஸ்கூலுக்குப் போகும்போது அவர் வீட்டுக்குப் போயி அவரை வரச்சொல்லிட்டுப் போன்னு சொல்லுவாரு. அப்ப எப்பாவது அவளை பார்ப்பேன். ஒண்ணும் பேச்சு வார்த்தை கிடையாது. ஸ்கூல் முடிஞ்சு காலேஜ்ல பி யூ சி சேர்றப்ப அந்த வருஷம் காலேஜ்ல கோ எட் ஆக்கினாங்க. அதுனால அவளும் எங்க காலேஜ்லயே சேந்தா. அவ செகண்ட் க்ரூப். நான் ஃபர்ஸ்ட் க்ரூப். அவங்க க்ரூப்ல 19 கேர்ள்ஸ். எங்க க்ரூப்ல வெறும் மூணே பேர்தான். அந்த க்ரூப் பசங்க செம ஜாலியா இருப்பாங்க. ஒவ்வொரு இடைவேளையிலும், அந்த பொண்ணுங்க பின்னாடியே அலைஞ்சிட்டிருப்பாங்க.

டிகிரி நான் திருச்சில படிச்சேன். அவ தருமபுரியிலேயே படிச்சா. லீவுல அவ இருக்கற அதே தெருவில என் ஃபிரெண்ட் வீட்டுக்குப் போவேன். அந்த தெருவுல இன்னும் எனக்கு 4, 5 ஃபிரெண்ட்ஸ் இருந்தாங்க. அது ஒரு காலனி, லைனா ரெயில் பெட்டி மாதிரி வீடு. எல்லா வீடும் ஒரே மாதிரி இருக்கும். அங்க நாங்க எங்க ஃப்ரெண்ட்ஸ் வீடுகள்ல யார் வீட்டுல வேணும்ன்னாலும் விளையாடுவோம். அப்படி ஒரு நாள் வெளையாடிட்டிருக்கறப்ப நடுல நான் கடைக்குப் போய் ஏதாவது ஸ்நாக்ஸ் வாங்கிண்டு வரலாம்னு போனேன்,திரும்பி வர்றப்ப தவறுதலான ஒரு வீடு தள்ளி, அவ வீட்டுக்குள்ள நொழைஞ்சுட்டேன். வீட்டுல யாரும் இல்ல போல. அவ ஒரு ஸ்டூல்ல ஏறி எதோ படத்தை மாட்டிட்டிருந்தா. நான் வர்ற சத்தத்தைக் கேட்டு திரும்பினவ, ஸ்டூல் நொடிச்சு சரிஞ்சா, நான் ஓடிப் போய் அவளை புடிச்சிட்டேன். அவளுக்கு மொகம் செவந்து போச்சு. வெட்கத்தோட மெல்லிசா தேங்க்ஸ் சொன்னா. நான் சாரி சொல்லிட்டு வெளில வந்துட்டேன்.
அதுக்கப்பறம் எப்பவாவது பாத்தா ஒரு புன்சிரிப்பு. அவ்வளவோதான், அவளோட க்ளாஸ்மேட் எங்க தெருவில இருந்ததால சனி ஞாயிறு அடிக்கடி அவ வீட்டுக்கு வருவாங்க இவளும் இவ ஃப்ரெண்ட்ஸும். நான் எங்க வீட்டுல ஜன்னல் ஒட்டி டேபிள் சேர் போட்டிருப்பாங்க, அதுல ஒக்காந்து ஏதாவது படிச்சிட்டிருப்பேன். அப்ப ஒரு நேர் கொண்ட பார்வை அவளிடமிருந்து வரும் அவ்வளவுதான்.
காலச் சக்கரம் வேகமா சுழன்றது, அவ குடும்பத்துல அடுக்கடுக்கா சோக நிகழ்வுகள். நாங்களும் சென்னை வந்துட்டோம். எங்க அப்பா இறந்தப்பறம் அவங்க அப்பாவோட தொடர்பும் இல்லாததால அவங்க குடும்பம் பத்தி ஒண்ணுமே தெரியாம போச்சு. எப்பவாவது தருமபுரி வாழ்க்கையை மனசில் அசை போடறப்ப இவளும் ஏதாவது ஒரு சீன்ல வருவா. அவ்வளவுதான். அப்ப நெனைச்சுப்பேன் இவளுக்காவது நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கணும்னு.
கடவுள் எப்பவுமே சுகமோ, துக்கமோ சிலவுங்களுக்கேதான் அடுக்கடுக்கா கொடுப்பான். மெட்றாஸ்ல ஒரு நாள் பாண்டி பஜார்ல எதிர்பாராத விதமா அவளைப் பார்க்க நேர்ந்தது. ஆள் அப்படியே இருந்தா, ஆனா அவ திருமண வாழ்வும் சரியா அமையலையாம். ஆனா அந்த சோகமே மொகத்துல தெரியாம பழைய மாதிரியே இருந்தா. நான் அவ குடும்பத்தைப் பத்தி விசாரிக்க, அவ என் குடும்பத்தைப் பத்தி விசாரிச்சா. பக்கத்துல ஒரு கடைல கூல் ட்ரிங்க்ஸ் குடிச்சோம்.
கெளம்பரப்ப சொன்னா. "இப்ப பேசினா மாதிரி நீ அப்ப என்கூட பேசியிருக்கலாம், அப்பல்லாம் நீ என்கூட எல்லாம் பேச மாட்டே"
நான் பேச நினைத்ததெல்லாம் அவள் பேசிவிட்டு சென்றாள்.
No comments:
Post a Comment