"அருகில் வந்தாள், உருகி நின்றாள்"
எஸ் எஸ் எல் சி படிக்கறப்ப என் சித்தப்பா பையனுக்கு பூணூல் போட்டாங்க. அதுக்கு மேட்டூர் போனோம். அங்க சின்ன அத்தையோட வீட்டுக்காரர் (அத்திம்பேர்) அவர் பொண்ணோட வந்திருந்தார். பொண்ணு மூத்த தாரத்து பொண்ணு, அங்க அத்தை ரெண்டாம் தாரமா வாக்கப்பட்டாங்க. 1966 ல கல்யாணம் அரவங்காட்டுல. அப்ப எனக்கு 3 1/2 வயசு. இந்தப் பொண்ண கல்யாணத்துல பாத்த ஞாபகம். ஆனா அப்ப யாருன்னு தெரியாது. ரெண்டாம் தாரம்னு எல்லாம் தெரியாது, புரியவும் புரிஞ்சிருக்காது தெரிஞ்சிருந்தாலும். அதுக்கப்பறம் இப்பதான் அவங்கள பாக்கறோம். கல்யாணம் ஆனாவொடனே பூனா போயிட்டாங்க, அவருக்கு ORDINANCE FACTORYல வேல. அந்த பேக்டரி அரவங்காட்டுல, அப்பறம் பூனாலதான். அவங்க கல்யாணத்துக்கப்பறம் மொத மொதலா அவங்க கலந்துக்கற எங்க குடும்ப நிகழ்ச்சி. அத்திம்பேர் ரொம்ப ஜாலியான பேர்வழியா இருந்தாரு. பூணூல் முடிஞ்சு எங்க கூடவே தருமபுரி வந்து ரெண்டு நாள் இருந்துட்டுப் போனாரு. அந்தப் பொண்ணும் எங்க எல்லார் கூடவும் பழகிச்சு. அது என்னை விட ரெண்டு வயசு பெரியவ. ரெண்டு நாள் முடிஞ்சு அவங்க மெட்ராஸ்ல இருக்கற எங்க இன்னொரு அத்தை வீட்டுக்கு போயிட்டு அப்படியே பூனா போயிட்டாங்க. ஊருக்கு போயி எங்க அத்திம்பேர் அவரோட ஹீரோ சைக்கிளை எனக்கு அனுப்பி வெச்சாரு. அவருக்கு எங்க குடும்பத்தை ரொம்ப புடிச்சுப் போச்சு.
இந்த சந்தோஷம் ரொம்ப நாள் நிலைக்கல. ஒரு 6 மாசத்துக்குள்ள அத்திம்பேர் இறந்துட்டாரு. எங்க அம்மா மட்டும் பூனா போயிட்டு, அத்தையை கூட்டிக்கிட்டு எங்க வீட்டுக்கு வந்து ஒரு நாள் கழிச்சு மறுபடி பூனா கொண்டு போயி விட்டாங்க. 10 நாளைக்குள்ள தாய் வீடு வரலேன்னா அப்பறம் ஒரு வருஷம் வரக்கூடாதாம் அதுக்காக. எனக்கு அத்தைகிட்ட எப்படி ஆறுதல் சொல்றதுன்னு தெரியல. அவங்களும் ரொம்ப அமைதியா இருந்தாங்க.
அந்த வருஷம் சம்மர்ல ஒரு ஆச்சரியம், பூனா அத்தைப் பொண்ணு, சென்னை அத்தைப் பொண்ணோட தருமபுரி வந்தது. வந்து ஒரு 15 நாள் இருந்தது. எங்க பெரியம்மா பொண்ணு (அக்கா) வேற வந்திருந்தது. கூடவே ரெண்டு குடும்பத்துலேர்ந்தும் 4 குட்டிப் பசங்க, அறுந்த வாலுங்க வேற. ஒரே கும்மாளம்தான். சொந்தக்காரங்க வந்தா நாங்க ஒகேனக்கல் கூட்டிட்டுப் போயிடுவோம். செலவு கம்மி, ஜாலியாவும் இருக்கும். காலைல 6 மணிக்கு கெளம்பினா மாலைல 6 மணிக்குள்ள திரும்பி வந்துடலாம்.
இந்த தடவை பூனா அத்தைப் பொண்ணு நான் செய்யறதெல்லாம் அதிசயமா பார்த்து பாராட்டிட்டு இருந்துச்சு. நான் பாடறது, படம் வரையறது எல்லாம் அதுக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது. நான் அப்பதான் ஹிந்தி கொஞ்சம் கத்துக்கிட்டிருந்தேன். ப்ராத்மிக் பாஸ் செஞ்சிருக்கேன். என்னோட ஹிந்தியைக் கேட்டு கேலி செய்யும். திடீர்னு எங்க பெரியம்மா பொண்ணு சைக்கிள் கத்துத் தர சொல்லி கேட்டாங்க. எங்க அக்கா, பெரியம்மா பொண்ணு, அத்தைப் பொண்ணு மூணு பேருக்கும் கத்துத் தர வேண்டியதாப் போச்சு, எங்க அண்ணன் நைசா ஒதுங்கிட்டான். நாந்தான் 3 பேருக்கும் கத்துத் தந்தேன். அங்க அக்காவும் பெரியம்மா பொண்ணும் ரெண்டு நாளோட நிறுத்திட்டாங்க. அத்தை பொண்ணு மட்டும் ஒரு வாரம் கத்துக்கிச்சு.
ஆச்சு மெட்ராஸ் திரும்ப டைம் வந்துச்சி. நான் எங்க அம்மா கிட்ட கேட்டு நான் இவங்களை எல்லாம் கொண்டு போய் விடறேன், அப்படியே மெட்றாஸ்ல ரெண்டு வாரம் இருந்துட்டு வரேன்னு சொல்லி அவங்க கூட போனேன். அத்தை பொண்ணுங்க ரெண்டு பேரையும் எங்க அத்தைப் பையன் பஸ் ஸ்டாப் வந்து கூட்டிட்டுப் போயிட்டாரு. எங்க பெரியம்மா பொண்ணை நான் பெரியம்மா வீட்டுல விட்டுட்டு அங்க ஒரு வாரம் இருந்தேன். அங்க ஒண்ணும் எங்கயும் சுத்திப் பாக்கப் போகல. ஒரு தடவை பீச் போனதோட சரி. ஒரு வாரம் கழிச்சு எங்க மெட்றாஸ் அத்தை வீட்டுக்கு போனேன். அவங்க வீடு கீழ்ப்பாக் கார்டன்ஸ்ல இருந்தது. (அந்த அத்தையும் அத்திம்பேரும் காலமாயிட்டாங்க). அங்க எங்க அத்தைப் பசங்களும் ஜாலியா பழகுவாங்க. எல்லாரும் என்னை விட பத்திலிருந்து 15 வயசு வரை பெரியவங்க. 4 பேர். அங்க அத்தை பொண்ணே என்னை விட 10 வயசு பெரியவங்க.
பகல்ல எல்லாரும் வேலைக்குப் போயிடுவாங்க, நான், எங்க மெட்ராஸ் அத்தைப் பொண்ணு, பூனா அத்தைப் பொண்ணு, மெட்ராஸ் அத்தையோட பெரிய பொண்ணு பசங்க, வாண்டுங்க மட்டும்தான். பாதி நேரம் அந்தப் பசங்களை சமாளிக்கறதிலேயே சரியாயிடும், அவங்க தூங்கின ஒடனே நாங்க சீட்டு, அந்தாக்ஷரி இது மாதிரி விளையாடுவோம். நான் கடைக்கு சென்று ஏதாவது பொருட்கள் வாங்கி வருவேன் நைட் டின்னர் தயார் செய்ய. அப்படி ஒரு நாள் போயிட்டு வரும்போது பூனா அத்தைப் பொண்ணு (மீனா) என்னுடைய ஜீன்ஸை மாட்டிக்கிட்டு ஒரு மீசை வரைஞ்சிக்கிட்டு என்னை மாதிரியே மிமிக்ரி செஞ்சு காமிச்சா, ஒரு கலாட்டாதான்.

நாங்க மூணு பேரும் ஒரு நாள் கெல்லீஸ் உமா தியேட்டர்ல சொல்லத்தான் நினைக்கிறேன் மார்னிங் ஷோ போனோம். அந்த சமயம் ஓமன், எக்ஸ்சார்சிஸ்ட் எல்லாம் ஓடிட்டிருந்தது. மீனாவுக்கு அது ரெண்டும் பாக்கணும்னு ஆசை. மெட்ராஸ் அத்தைப் பொண்ணு நான் வரலேன்னு சொல்லிட்டாங்க. ஒரு நாள் எல்லார்கிட்டயும் பர்மிஷன் வாங்கிகிக்கிட்டு ஓமன் ஈவினிங் ஷோ, தேவி தியேட்டருக்குக் கூட்டிப் போனேன். படம் வெளி வந்து ஒரு 3, 4 வாரம் ஆகியிருந்தது. தியேட்டர் முக்காவாசிதான் ரொம்பியிருந்தது. ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல அவ்வளவா கூட்டம் இல்ல. படம் ஒரு த்ரில்லிங்காவே போச்சு. ஒரு சீன்ல அந்தப் பேய்க்குழந்தை அதோட முகத்தை அவங்க அம்மாக்கு காமிச்சு மிரட்டும், அப்ப எல்லாரும் தியேட்டர்ல ஓன்னு கத்திட்டாங்க, இந்தப் பொண்ணு என்னோட கைய இறுக்கிப் புடிச்சவதான், படம் முடியற வரை விடல. பஸ்லயும் என் கையைப் புடிச்சுக்கிட்டே வந்தா. நைட் தூங்கறதுக்கு முன்னாடி விபூதி பூசிட்டு படுத்தா. எக்ஸார்சிஸ்ட் வரலேன்னு சொல்லிட்டா. (நான் தனியா ஈகா போய் நைட் ஷோ பாத்துட்டு வந்தேன்).
ஆச்சு அவ கெளம்பற நாளும் வந்தது. நான் சென்ட்ரல் போயி அவளை வழியனுப்ப போனேன். ட்ரெயின் கிளம்ப அரைமணி இருந்தது. பெட்டி எல்லாம் அவ சீட்டுல வெச்சுட்டு வெளில பெஞ்சுல உக்காந்தோம். அவ எதுவும் பேசல, காஃபி ரொம்ப புடிக்கும் அவளுக்கு, அதுவும் வேண்டாம்னுட்டா, நான் ரொம்ப கம்பல் பண்ணி கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி கொடுத்தேன். குடிச்சிட்டு அமைதியாவே இருந்தா. 10 நிமிஷம் இருக்கும் ட்ரெயின் கிளம்ப. மெதுவா சொல்லத்தான் நினைக்கிறேன் பாட்டை ஹம் செஞ்சா, முதல் ரெண்டு வரிகளான சொல்லத்தான் நினைக்கிறேன், உள்ளத்தால் தவிக்கிறேன் மட்டும் திருப்பி திருப்பி ஹம செஞ்சா. அப்பறம் நான் அவளை நேரமாச்சு நீ சீட்டுல போயி உக்காந்துக்கோன்னு சொன்னேன். அவ ட்ரெயின் ஏறி வாசப்படி கிட்டயே நின்னிட்டிருந்தா, ட்ரெயின் கிளம்ப சிக்னல் விழுந்தது. அவ கண்ணுலேர்ந்து பொலபொலன்னு கண்ணீர். எனக்கு ஒன்னும் புரியல, ஒரு அரை நிமிஷம் என் கையைப் புடிச்சிக்கிட்டா. அப்பறம் கதவு கிட்டயே நின்னு கண்ணிலிருந்து மறையற வரை டாட்டா காமிச்சிக்கிட்டே போனா. அவ அழுதது எனக்கு ஒரு மாதிரி இருந்தது. ஏன் அழுதான்னு என்னால சரியா தீர்மானிக்கவும் முடியல. ஆனா என் மனசுலயும் எதோ பாரம்.
அப்ப எனக்குத் தோன்றிய வரிகள்
"உந்தன் மனத்தைக் கொண்டு செல்லவா
எந்தன் மனத்தைத் தந்து செல்லவா"
(சிறிது நாட்களில் அவளது அப்பா வேலை அவளுக்குக் கிடைத்து விட்டது. ஒரு ஆங்கிலோ இந்தியனை திருமணம் செய்து கொண்டு விட்டாள் என்று அத்தை சொன்னார்கள். அதற்கு பிறகு அவளுக்கும் எங்கள் அத்தைக் குடும்பத்திற்கும் தொடர்பு இல்லை. ஏழெட்டு வருடங்களுக்குப் பிறகு அவள் இறந்து விட்டாள் என்றும் அவள் கணவன் அவளுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்று விட்டான் என்றும் 25 வருடங்களுக்குப் பிறகுதான் தெரிய வந்தது. மூன்றாம் பிறையாக என் வானில் வந்து மறைந்து விட்டாள்)
No comments:
Post a Comment