Saturday, June 23, 2018

கனவில் கண்ட திருமுகம்

"கனவில் கண்ட திருமுகம்"

"ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு, கனவினிலே என் அவள் வந்தாள்"

உண்மையிலே அது ஒரு நிலாக் காலம். இருபதுகளில் என் வயது. யார் பின்னும் அலைந்ததில்லை. ஆனால் அழகை ஆராதனை செய்வேன். அதில் தவறில்லை. அப்படி ஒரு நாள். இன்றும் பசுமையாய் என் நினைவில் இருக்கிறது அந்த கனவு. கனவிலே என் அவள் வந்தாள். அவளை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. ஆதலால் பாரதியின் வார்த்தைகளில் வர்ணிக்கிறேன்.

மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன் 
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை 
பொங்கிவரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும் 
புன்னகையின் புது நிலவும் போற்ற வரும் தோற்றம் 
துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து 
தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்.
அங்கதனை கண்விழித்தேன் அடடா, ஓ அடடா 
அழகெனும் தெய்வம்தான் அதுவென்று அறிந்தேன்.

பாரதியின் வர்ணனைகள் அவளுக்கு அப்படியே பொருந்தும். கனவில் உண்மையிலேயே அவள் என்னை எழுந்து அவளைப் பார்க்க சொன்னாள். ஒருவேளை பாரதியின் பாடலை அப்போதைய சமீபத்தில் கேட்டிருந்தேனா என்பது தெரியவில்லை. எனக்கு இப்பாடல், குறிப்பாக சி எஸ் ஜெயராமன் குரலில் மிகவும் பிடிக்கும். தூங்காதே என்று அவர் ஒரு சிறிய நிறுத்தம் கொடுத்து பாடும் அழகே தனி. அந்த நினைவில் அந்தக் கனவு வந்ததா என்று தெரியவில்லை. ஆனால் உண்மை போலவே இருந்தது. உண்மையிலேயே அவள் அழகெனும் தெய்வம்தான். எனக்கு ஒரு அனுபவம் உண்டு. எதாவது விசித்திரக் கனவு வந்தால் அது ஒரு வாரம், பத்து நாட்கள் மறுபடி மறுபடி வரும். அது போல் இது மறுபடி வருமா என்று நப்பாசை. பேய்க் கனவுகளும் குரங்குக் கனவுகளும்தான் அப்படி வரும் போலிருக்கிறது. இது வரவில்லை, ஆனால் அது ஆழப் பதிந்து விட்டது.

நீங்கள் சில திரைப் படங்களில் பார்த்திருப்பீர்கள், கனவில் ஒரு பெண்ணைக் கண்டு ராஜகுமாரன் அதே பெண்ணுக்காக காத்திருப்பதும் தேடி அலைவதும். எனக்கு அது சற்று விசித்திரமாக இருக்கும். ஆனால் என்னுடைய நிலை இப்படி ஆயிற்று. நான் பார்க்கும் பெண்களிலெல்லாம் அவள் முகத்தைத் தேடத் துவங்கினேன். சிலர் என்னை சந்தேகத்துடன் பார்க்கத் துவங்கினார்கள். அவன் பார்வையே சரியில்லை என்ற பேச்சுக்களும் என் காதில் அவ்வப்போது விழுந்தன. நான் அதையெல்லாம் சட்டை செய்யவில்லை.
Image may contain: 1 person, text

வீட்டில் திருமணப் பேச்சு எடுக்கத் துவங்கினார்கள். நான் பிடி கொடுக்கவில்லை. மீறி வரும் ஜாதங்களை நான் வேறு யாருக்காவது அனுப்பி விடுவேன். இப்படியே காலம் சென்று கொண்டிருந்தது, நான் ஒரு வரைகலை நிறுவனம் சொந்தமாக வைத்திருந்தேன். நடுவில் ஒரு ஐந்து வருடங்கள் வேலைக்குப் போனேன். அப்போது கட்டாயப் படுத்தி திருமணம் செய்து வைத்து விட்டார்கள். அது தனிக்கதை. பிறகு சில காலம் பயங்கரக் கஷ்டம். எந்த வேலையும் சரிப்படவில்லை. வயதும் 40 தாண்டி விட்டது. வீட்டில் தாளவொண்ணாத பிரச்சினை. யாருக்கும் தெரியாமல் ஒரு ஹோட்டலில் கூட வேலை செய்தேன். அப்போதும் பிடுங்கல்கள் தாங்கவில்லை. விரக்தியும் கோபமும் தாளாமல், என்னை விட்டு விடுங்கள், நான் பழையபடி GRAPHIC DESIGNING & PRINTING பிசினஸ் செய்கிறேன் என்று ஒரு நாள் சத்தம் போட்டு விட்டு முதலில் கம்பெனி பெயரில் ஒரு பேங்க் அக்கவுண்ட் ஆரம்பித்தேன். (FANTASY UNLIMITED). அதிர்ஷ்டம், ஒரு லண்டனை சேர்ந்த தமிழ் பிசினஸ்மேன் சில ஆர்டர் கொடுத்தார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு அயராத உழைப்பினால் MNC ஆர்டர் எல்லாம் வரத் துவங்கின. 

அப்படி ஒரு நாள் ஒரு பெரிய கம்பெனிக்கு அதன் எம் டியை சந்திக்க வேண்டியிருந்தது. சற்றுக் காத்திருந்து அழைப்பு வந்தவுடன் உள்ளே சென்றேன். என்ன அதிசயம், பாரதியின் அழகுத் தெய்வம். பதவிக்கேற்றவாறு அதே ஆணையிடும் தொனி. அந்த கம்பெனியின் ப்ராஜெக்ட் பெரிய ப்ராஜெக்ட்டாக இருந்ததால் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. சில சமயம் ஹோட்டல்களில் டின்னருடன் டிஸ்கஷன். அப்படிப்பட்ட ஒரு சமயத்தில் குடும்பத்தைப் பற்றிய விசாரிப்புகள். நான் சுருக்கமாக சொன்னேன் என் குடும்பத்தைப் பற்றி. அவளைப் பற்றி கேட்டேன். அவள் சொன்னாள்.

"என் கனவில் வந்த நாயகனைக் காணவே முடியவில்லை, எனவே அப்படியே இருந்து விட்டேன்" என்று.

யாரென்று கேட்டு மனதை நோகச் செய்ய விரும்பவில்லை (இருவர் மனதையும்தான்).

நன்றி: ஓவிய நண்பர் ஷ்யாம் ஷங்கர்

No comments:

Post a Comment