"பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா"
திருச்சியில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்த சமயம். ஒரு நாள் மெயின்கார்ட் கேட் பஸ் ஸ்டேண்டுல ரூட் 64 - துப்பாக்கித் தொழிற்சாலை போற வண்டி - எங்க காலேஜ்குள்ள கொண்டு போய் விடும். அதுனால நெறைய பேர் அதுலதான் ஏறுவோம். நான் இதுக்காகவே மெயின்கார்ட் கேட் போய் ஏறுவேன், உக்காந்தும் போகலாம். நான் உக்காந்து மேத்ஸ் ரிவைஸ் செஞ்சுட்டே வருவேன். அப்படி ஒரு நாள் - அழகிய காலையாக இருந்தது, தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்ட பொழுது. நவம்பர் மாதம் ஆதலால் வண்டி புறப்பட்டதும் சில்லென்று ஒரு காற்று முகத்தில் வீசியது, ரம்மியமான காலை. அப்போது காதில் மெதுவாக "ஏழு ஸ்வரங்களுக்குள்" பாடலின் ஹம்மிங் கேட்டது. சட்டென்று திரும்பிப் பார்த்தால், அன்றலர்ந்த அல்லிப்பூ, வெட்கத்துடன் புன்னகை பூத்தது. நான் பதிலுக்கு புன்னகை பூத்துவிட்டு (அசடு வழிந்து என்பதுதான் சரியான வார்த்தைப் பிரயோகம்) திரும்பிக் கொண்டு புத்தகத்தை மூடி விட்டு, ஹம்மிங் தொடர்கிறதா என்று உற்றுக் கவனித்தேன். இல்லை. அதற்கப்புறம் ஏதுவும் இல்லை.
அவள் பேரழகு இல்லை. ஆனால் பளிச்சென்று திருத்தமான முகம். எவரையும் வசீகரித்து விடும் சிரிப்பு. எப்போதும் நெற்றியில் பொட்டு தவறாது இருக்கும். அந்த பொட்டு நிலவிற்கு பொட்டு வைத்தது போல் இருக்கும்.

அடுத்த ஓரிரு நாட்கள் பஸ் கிளம்பியவுடன் பின்னால் திரும்பிப் பார்ப்பது வழக்கம் அவள் இருக்கிறாளா என்று. ஆனால் வேறு எங்காவது அமர்ந்திருப்பாள். ஆனால் அங்கிருந்து என்னைப் பார்த்து ஒரு புன்னகை மட்டும் தவறாமல். மனதில் வசந்த காலங்கள் இசைந்து பாட ஆரம்பித்தன. ஒரு நாள் அவளைக் காணவில்லை. பஸ் கிளம்பியும் வரவில்லை. சரி என்று நான் படித்துக் கொண்டு வந்தேன். பஸ் மரக்கடை ஸ்டாப்பில் நின்றது. அப்போது ஏதோ குறுகுறுவென்றிருக்கவே ஜன்னல் வழியே வெளியே பார்த்தால் தருமபுரியில் என்னுடன் படித்த பெண் இன்னொரு பஸ்ஸிலிருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் அவளைப் பார்த்து சிரிக்கவே அவளும் சிரித்தாள். அப்போது பின்னாலிருந்து கனைக்கும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால், நிலா! ஆனால் அப்போது சூரியனின் வெம்மை முகத்தில். போதாக்குறைக்கு தருமபுரி பெண் என்னைப் பார்த்து கையாட்டி வேறு சென்று விட்டாள். அடுத்த 15 நாளும் அமாவாசைதான்.
சிறிது நாட்கள் சென்று இடைவேளையில் என்னுடைய வகுப்பில் படிக்கும் பெண்ணுடன் வந்தாள். என்னுடைய மேத்தமேடிக்கல் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் புத்தகம் வேண்டும் என்று. அப்போதுதான் பெயர் தெரிந்தது. அது வரை நிலா என்றுதான் பெயர் வைத்திருந்தேன். மறுபடியும் அவ்வப்போது புன்னகை கிடைக்கும், வேறு பேச்சு எதுவும் இல்லை.
சில நாட்கள் கழிந்தது. ஒரு நாள் மாலை பிசிக்ஸ் லேபிலிருந்து கிடார் இசை, தப்லா ஒலி, பாட்டு சத்தம் எல்லாம் கேட்கவே எட்டிப் பார்த்தேன். திருச்சி வானொலி நிலையத்தில் இளைய பாரதம் நிகழ்ச்சிக்கு எங்கள் கல்லூரியிலிருந்து பங்கு பெறுவதற்கு பயிற்சி நடந்து கொண்டிருந்தது. விடுவோமா நம்ப. பாங்கோஸ் வாசிக்க போயிட்டேன். மொதல்லயே இது பத்தி தெரியாததால எனக்கு அதுக்கு மட்டும்தான் சான்ஸ் கிடைச்சுது. நம்ம அதுக்காகவா போனோம். நம்ம நிலாதான் அங்க மெயின் பாடகி. அதுக்குத்தானே, சில பாடல்கள் பாடி முடிச்சதும். நான் நிலாவை ஏழு ஸ்வரங்களுக்குள் பாட சொன்னேன். அவளும் பாடினா. எல்லாருக்கும் ஆச்சரியம், ப்ரொஃபசர்ங்க உட்பட. இவன் ஏன் இந்தப் பாட்ட குறிப்பா பாட சொல்றான்னு.
அப்படியே அப்பப்ப எதாவது பேச்சு வார்த்தை நடந்திட்டிருந்தது. 3 ஆம் வருஷம் படிக்கறப்ப திருச்சில இருக்கற எல்லாக் கல்லூரிகளுக்கும் கல்ச்சுரல் காம்பெடிஷன். எங்க காலேஜ் அப்பத்தான் முதல் முறையா கலந்துக்கப் போவுது, இன்ஸ்ட்ருமென்ட்ஸ் ரெண்டே ரெண்டுதான். ஒரு கிடார். பாங்கோஸ். அதுல ப்ராக்டிஸ் செஞ்சு ப்ரோக்ராம் நடக்கறப்ப வேற காலேஜ் பசங்க கிட்ட கேட்டு எலெக்ட்ரிக் கிடார், ட்ரிபிள் காங்கோ கடன் வாங்கி வாசிச்சுக்கலாம்னு பிளான். நான் அவளுக்காகவே ரெண்டு பாட்டு "ஆசையை காத்துல தூது விட்டு" "மேகமே மேகமே ரெண்டும் செலெக்ட் செஞ்சேன். ப்ரோக்ராம் நம்ம பொறுப்புல விட்டாங்க, மொதோ பாட்டே ஆசையைக் காத்துல தூது விட்டு, கிடாரிஸ்ட் அருமையான பிளேயர். எல்லா மெயின் வாத்தியங்கள் ஒலிகளையும் அதில் மேனேஜ் செஞ்சான். நான் ட்ரிபிள் காங்கோ. மொத பாட்டு சூப்பரா அமைஞ்சது. ப்ரோக்ராம்க்கு மொத நாள் தான் ஃபர்ஸ்ட் இயர் பையன் ஒருத்தன் வந்தான், அப்படியே ஜேசுதாஸ் மாதிரியே பாடுவான். அவனை வெச்சு அப்பத்தான் பிரபலமா இருந்த கண்ணே கலைமானே ரெண்டாவது பாட்டா போட்டோம். அப்பறம் இளைய நிலா, தோகை இளமயில்னு பாடி, கடைசில மேகமே மேகமேல முடிச்சோம். அதுக்கு தப்லா கூட இல்ல. அவ கொரல நம்பிதான். எங்களுக்கு ப்ரைஸ் கிடைக்கல, ஆனா எல்லாரும் பாராட்டினாங்க எங்க பர்ஃபாமன்ஸ் ரொம்ப நல்லா இருந்ததுன்னு. ப்ரோக்ராம் முடிஞ்சு முத்தரசநல்லூர் போகணும் எங்க வீட்டுக்கு அதுனால பஸ் ஸ்டான்ட் வரைக்கும் துணை வரை சொன்னா. அதுவும் எப்படி தெரியுமா, "நீ என்னோட துணைக்கு வருவியா?" அப்படின்னு ஒரு பாஸ் "பஸ் ஸ்டான்ட் வரைக்கும்" அப்படின்னு. என்னத்த சொல்ல. பஸ் ஸ்டான்ட் வரை போய் பஸ் ஏத்திட்டு வந்தேன், எதோ பேசிட்டு போனோம்.
அதுக்கப்புறம் காலேஜ்ல எப்பவாவது ஒரு வார்த்தை ரெண்டு வார்த்தைதான், நான் தமிழ்ப் பட பாடல்கள் எல்லாம் எழுதி ஒரு டயரி வெச்சிருக்கேன். அதை கேட்டு வாங்கிப் போனா. அப்பறம் நானே வெச்சுக்கறேன்னு சொன்னா. காலேஜ் முடிஞ்சு போறப்ப என்னோட அட்ரஸ் வாங்கிகிக்கிட்டு அவ அட்ரஸ் குடுத்தா. போறதுக்கு முன்னாடி என்னை ஆழமா ஒரு பார்வை பாத்தா. அட்ரஸ் வாங்கியும் யாரும் லெட்டர் போட்டுக்கல. எங்க ஃ ப்ரெண்ட்ஷிப் எப்படிப் பட்டதுன்னு எங்களாலேயே கணிக்க முடியல.
காலம் அப்படியே ஓடிப் போச்சு. 2002 னு நினைக்கறேன், என் அண்ணா பொண்ண ஸ்கூல்ல விடப் போனேன். அங்க பாத்தா அவ க்ளாஸ் டீச்சர் இவதான். கொஞ்ச நேரம் க்ஷேம நலன் விசாரிச்சா. அப்பறம் சொன்னா. நான் 1996லதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எதுக்காக காத்திருந்தேன்னு தெரியலன்னு சொன்னா. நான் சொன்னேன் நான் 1998லதான் (36 வயசுல) அப்டின்னவொடனே அப்படியே தெகைச்சுப் போய் பாத்தா.
அவ கடைசியா பேசினது. "ஏதோ மிஸ் பண்ணிட்டோம், என்ன எதிர்பார்த்தோம்னு தெரியாமலேன்னு"
அப்பறம் கேட்டா "உனக்கு எதனை குழந்தைங்க"
"ரெண்டு பெண் குழந்தைங்க, பெரியவ பேரு ரம்யா" நான்.
நிலவின் முகத்தில் மூன்றாம் பிறை போன்று ஒரு புன்னகை. பிறகு வகுப்புக்கு சென்று விட்டது நிலவு. நான் அவள் பிள்ளைகளைப் பற்றிக் கேட்கவில்லை. கேட்பானேன், பிறகு வருத்தப்படுவானேன் என்று. அதுவே எங்கள் கடைசி சந்திப்பு. அவள் எங்கு இருக்கிறாள் என்று நானும் நான் எங்கு இருக்கிறேன் எங்கு அவளும் கேட்கவில்லை. என் அண்ணா பெண்ணையும் அடுத்த வருடம் வேறு ஸ்கூல் மாற்றி விட்டோம்.
"பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர்ப் புன்னகையில் என்னை சுட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா - இது
எட்ட நின்று என்னைத் தொட்ட நிலா"
ஓவியம் - இளயராஜா
No comments:
Post a Comment