Thursday, July 26, 2018

ஒரு மட மாது உருகுகின்றாளே, உனக்கா புரியவில்லை

"ஒரு மட மாது உருகுகின்றாளே, உனக்கா புரியவில்லை"

நான் பணிபுரிந்த அலுவகத்தின் அதே காம்ப்ளெக்சில் அடுத்த அலுவகத்திலேயே அவளும் ரிசப்ஷனிஸ்ட்டாக பணிபுரிந்தாள். ஐஸ்வர்யா ராயின் அழகு, ஆனால் குடும்பப் பாங்குடன் கூடிய வணங்க வைக்கும் அழகு. நான் மார்கெட்டிங்கில் பணிபுரிந்ததால் அடிக்கடி வெளியே செல்ல வேண்டியிருக்கும். அப்படி ஒருநாள் காலையிலேயே செல்ல லிஃப்டிற்காக காத்திருந்தேன், லிஃப்ட் கதவு திறந்து அவள் வந்தாள் அவளது அலுவலகத்திற்கு, என்னைக் கடந்து சென்றாள். நான் ஒரு நிமிஷம் என்றேன் லிஃப்ட்மேனிடம். அவள் திரும்பிப் பார்த்து சொல்லுங்க என்றாள். நான் மிகவும் முக்கிய வேலையாக இருந்ததால் "சாரி, நான் லிஃப்ட்மேனை சொன்னேன், என்று சொல்லிவிட்டு சென்று விட்டேன். அன்று மாலைதான் உறைத்தது, "மடையா, மாங்கா மடையா" என்று என்னை நானே திட்டிக் கொண்டேன்.

இன்னொரு நாள், அலுவலகத்திற்கு நான் வந்து லிஃப்டில் நுழையும்போது அவளும் வந்தாள். நான் அவளுக்கு வழிவிட்டு கதவருகே நின்று கொண்டேன், ஆட்டோமேடிக் கதவு ஆகையால் தானே மூடிக் கொண்டது. நான் 2 ஆம் தளத்திற்கு சென்று கதவு திறக்கக் காத்திருந்தேன், ஓரிரு நிமிடங்கள் ஆயின, அவள் திருவாய் மலர்ந்து பட்டனை அமுக்கினால்தான் லிஃப்ட் போகும் என்றாள். சரி பல்பு. (அப்படி என்ன நினைப்பு மனசிலன்னு கேக்கப்படாத்)

அவர்களது ஷேர்மார்கெட் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம். எங்களதும் ஷேர்மார்கெட் சம்பந்தப்பட்ட பிரிண்டிங் நிறுவனம். அதன் சென்னைக் கிளையில் நான் மார்கெட்டிங்கில் இருந்தேன், சில சமயம் அவர்களது ஆஃபீஸிலிருந்து எதாவது ஒரு நிறுவனத்தின் ஷேர் அப்ளிகேஷன் வாங்கி செல்ல வரும்போது என்னைப் பார்த்து ஒரு புன்னகை. போதாதா என்னுடைய சக அலுவலர்களுக்கு. கிண்டல்தான், சிலர் அவளை அண்ணி என்றே குறிப்பிட ஆரம்பித்து விட்டார்கள். 

எங்கள் காம்ப்ளெக்சில் ஒரு சிறிய ரெஸ்டாரண்ட் இருந்தது. சுவையான உணவு வகைகள் கிடைக்கும். நான் பெரும்பாலும் மதிய உணவு 3 அல்லது 4 மணிக்கு அங்கு ஒரு தோசை சாப்பிடுவேன். அந்த நேரத்தில் பெரும்பாலும் கூட்டம் இருக்காது. அவள் அவளுடைய பாஸுக்கு டீ வாங்க வருவாள் மாலையில். அப்படி ஒரு நாள் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவளும் வந்து டீ ஆர்டர் செய்து விட்டு என் எதிரே அமர்ந்தாள். உங்களுடன் பேச வேண்டும். இன்று மாலை உட்லண்ட்ஸ் ட்ரைவின் வர முடியுமா என்றாள். எனக்கும் அன்று மாலை சிறிது நேரம் ஃப்ரீயாக இருந்ததால் சரி என்றேன் (அப்புறம் இரவு 3 மணி வரை வேலை இருக்கும்). 

மாலை உட்லண்ட்ஸ் ட்ரைவின் சென்றேன். அவள் சிறிது நேரம் பொதுவாக சில விஷயங்கள் பேசிவிட்டு நேரடியாக விஷயத்திற்கு வந்தாள். "உங்களை எனக்குப் பிடித்திருக்கிறது, உங்களுக்கு சம்மதம் என்றால் உங்களை மணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்றாள். அவள் முகத்தைப் பார்த்தேன், அதில் ஒரு நேர்மை இருந்தது. ஏற்கெனவே அவளைப் பற்றி ஒரு மதிப்பீடு வைத்திருந்தேன். அவள் மிக அழகு என்றாலும் அடக்கமானவள், நேர்மையான எண்ணங்கள் உடையவள் என்று. என் கணிப்பு சரியாகவே இருந்தது.

நீ இத்தனை நாள் ஒன்றும் முயற்சிக்கவில்லையா என்ற உங்கள் குரல் என் காதில் விழுகிறது. அவளது அழகு அனுபவிக்க வேண்டிய அழகல்ல. ஆராதிக்க வேண்டிய ஒன்று. மேலும் அவளை மணந்து கொண்டால், எங்கள் குடும்பத்தில் அவள் பலவித பிரச்சினைகளை சந்திக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். இல்லையெனில் தனியே சென்று விட வேண்டும், அதில் எனக்கு விருப்பமில்லை, மேலும் அப்போதைய என்னுடைய சம்பளம் 2,500/- மட்டுமே, ஏறக்குறைய அவளும் அதே சம்பளம்தான் வாங்கியிருக்க வேண்டும். என்னதான் சம்பள உயர்வு வந்தாலும் 7000/- ரூபாய் சம்பளத்தை அடைய குறைந்தது 5 வருடங்கள் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும், அவள் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளை என்னுடைய குடும்பத்தில் வசதிக் குறைவான நிலையில் என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. மேலும் நான் திருமணமே வேண்டாம் என்றிருந்தால் எந்த ஒரு பெண்ணிடமும் காதல் கொள்ளவில்லை, அழகாக இருந்தால் ரசிப்பேன். அதுவும் அவர்கள் நம்மை கடந்து சென்ற பிறகும் முகத்தைத் திருப்பி அவர்களை பார்த்துக் கொண்டிருக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. நேராக கண்களைப் பார்ப்பேன், அவ்வளவுதான், இதையெல்லாம் அவள் கவனித்திருக்கிறாள். என்னை விரும்பும் காரணங்களாக இவற்றையும் சொன்னாள். நான் அவளிடம் தற்போதைய சூழ்நிலையில் என்னால் திருமணத்தைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்று சொன்னேன் (என்னுடைய அம்மா இரண்டு சிறுநீரகங்களும் பழுது பட்டு மிகவும் சீரியாஸான நிலையில் மருத்துவமனையில் இருந்தார்கள்). அவள் பரவாயில்லை காத்திருக்கிறேன் என்று சொன்னாள். தன்னால் என் குடும்பத்திற்கு உதவியாக இருக்க முடியும் என்றும் சொன்னாள். நான் மன்னித்துக் கொள்ளும்படி கூறினேன், மறுப்பதற்கு. அவள் சற்றும் முகவாட்டம் அடையாமல் புன்சிரிப்புடன் கிளம்பிச் சென்றாள்.
 

சில நாட்களில் என் அம்மா இறந்து விட்டார்கள், நானும் வேலையில் மூழ்கியிருந்தேன் வெறுமையை மறக்க. ஒரு கட்டத்தில் ஒன்றும் புரியாமல் வேலையை ராஜினாமா செய்து விட்டேன். ஆனால் 3 மாதங்களிலேயே என் சர்வீஸ் அவர்களுக்குத் தேவைப்பட்டதால் என்னை மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொண்டார்கள். மறுபடியும் அவளை சந்திக்கும் சந்தர்ப்பங்கள். இப்போதெல்லாம் கீழுள்ள ரெஸ்டாரன்டிலேயே பேசுவாள் ஏதாவது ஓரிரு வார்த்தைகள்.

அப்படிதான் ஒருநாள் சொன்னாள், நாளை என்னைப் பெண் பார்க்க வருகிறார்கள், நீங்கள் இப்போது சொன்னாலும் நான் வீட்டில் சொல்லி அதை நிறுத்தி விடுவேன், எங்கள் வீட்டில் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்றாள். நான் வேண்டாம், நடப்பது நடக்கட்டும் என்றேன். நான் சொல்வது உங்களுக்கு விந்தையாக இருக்கலாம், எனக்கும் இது மிகுந்த ஆச்சரியமே, பெண் பிடித்துப் போய் மாப்பிளை விட்டார் நிச்சயம் செய்யப்போகும் வேளையிலும் சொன்னாள், இப்போதும் என்னால் வீட்டில் பேசி சம்மதிக்க வைக்க முடியும் என்று, நான் ஒன்றும் சொல்லவில்லை, திருமணத்திற்கு ஒரே வாரம் இருக்கும்போதும் இப்படியே சொன்னாள். அப்போதும் நான் மறுத்தேன், மாப்பிள்ளை நியூசிலாந்து, என்னால் அவள் இங்கே கிடந்து கஷ்டத்தில் உழல வேண்டாம் என்று. அப்போதுதான் அவள் முகத்தில் சிறிது வாட்டம், என்னையே சில நிமிடங்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள், அவள் கண்களில் ஒரு வலி தெரிந்தது. ஒன்றும் பேசாமல் போய்விட்டாள். 

அதன்பிறகு நான் அலுவலக டூரில் பிசியாக இருந்து விட்டேன். அவள் திருமணம் முடிந்து ஒரு வாரம் கழித்து எனக்கு ஃ போன் செய்தாள், அன்றிரவு அவர்கள் அளிக்கும் டின்னரில் கலந்து கொள்ள முடியுமா என்று. நானும் சரி, அதில் கலந்து கொண்டு அவளை வாழ்த்திய மாதிரி இருக்கும் என்று சென்றேன். அவளது கணவரை அறிமுகப் படுத்தி விட்டு "இவர்தான் நான் கூறியவர்" என்றாள். அவர் கணவர் சொன்னார், மிகவும் நன்றி சார், இப்படி ஒரு தேவதையை எனக்கு விட்டுத் தந்ததற்கு என்றார். நான் நினைத்தேன், அவள் தேவதை அல்ல பூஜிக்கப்பட்ட வேண்டிய தெய்வம் என்று.

சில நாட்களிலேயே அவள் நியூசிலாந்து சென்று விட்டாள். போவதற்கு முன் ஒரு முறை வந்து என்னைப் பார்த்து மணம் செய்து கொள்ளும்படி சொல்லிவிட்டு சென்றாள். அதன் பிறகு நான் அவளைப் பார்க்கவில்லை, என்னுடைய வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டரில் பயணித்தது சில வருடங்களுக்கு. 

நெஞ்சம் மறப்பதில்லை. அவள் நினைவுகள் என் நெஞ்சில் என்றும். ஆனாலும் இன்றும் எனக்கு ஒரு துளியும் வருத்தமில்லை அவளை இழந்ததற்கு. நமக்குப் பிடித்தவர்கள் நன்றாக இருப்பதுதானே நமக்கு மகிழ்ச்சி!




Saturday, July 7, 2018

அம்மா பசிக்குதே, தாயே பசிக்குதே

"அம்மா பசிக்குதே, தாயே பசிக்குதே"

எங்க வீட்டுல எனக்கு பேரு சாப்பாட்டு ராமன், வெளுத்துக் கட்ட மாட்டேன், ஆனா டயத்துக்கு எனக்கு சாப்பிடணும். சூழ்நிலை எதுவா இருந்தாலும் சரி. எனக்கு சாப்பாடு முக்கியம். அதுக்காக பறக்காவெட்டின்னு நினைச்சுடாதீங்க (ஆனா என்னோட பாட்டி அப்படிதான் சொல்வா என்னை). தேவையான நேரத்துல பட்டினி இருக்கவும் முடியும் என்னால. ஆனா சாப்பாடு என்னோட தினசரி நடவடிக்கைல முக்கியமான விஷயமா இருந்ததென்னவோ உண்மை.

என்னால பட்டினி கிடக்க முடியும்னு சொன்னேன் இல்ல. ஆனா சமையல் முடிஞ்சுடுச்சுன்னா சாப்பிடணும்னு தோணற எண்ணத்த என்னால அடக்க முடியாது. மனசு சாப்பாட்டையே சுத்தி சுத்தி வரும், சாப்பிட்டு முடிச்சுட்டா அதைப் பத்தி நினைப்பு இருக்காது. இதுக்கு முக்கிய காரணம் என்னோட அம்மாவா இருக்கலாம்.
"முன்னை இட்ட தீ முப்புரத்திலே,
பின்னை இட்ட தீ தென்னிலங்கையிலே,
என் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே"ன்னு என்னோட வயித்துல பசித்தீயை தன்னோட அருமையான சமையலால மூட்டி விட்ட மகராசி. எங்க அப்பாவும் பசங்க பட்டினியா கெடக்க விட மாட்டாரு, பெரும்பாலான விசேஷங்கள்ல ஏதாவது எங்களுக்கு டிஃபன் கிடைக்க ஏற்பாடு செஞ்சுடுவாரு.

சின்ன வயசுல பரவாயில்ல, பசியை அடக்கறது கஷ்டம். ஆனா பெரியவனானப்பறமும் பசி பொறுக்காது எனக்கு. சமையல முடிச்சிட்டு அம்மா "சஷ்டியை நோக்க சரவணபவனார்"னு கந்த சஷ்டி கவசம் படிக்கறப்ப, என்னோட மனசு
"பட்னியைப் போக்க சரவணபவனில்
இட்லிகள் இரண்டு பொங்கல் வடையுடன்
காலையும் மாலையும் சென்று தின்று வர
பசியும் குறையும் வயிறும் நிறையும்"னு
பாடும். பூசை முடிஞ்சு நைவேத்தியம் ஆனாவொடனே நேர கிச்சன்ல போய் என்ன காய்னு பாப்பேன், ஏதாவது கிழங்கு வகைன்னா உடனே ஒரு பிளேட்ல எடுத்து வெச்சு ஒரு ஸ்பூன் நெய் ஊத்தி தின்பேன். 
Image may contain: 1 person, smiling, sitting, food and indoor

இதெல்லாம் அம்மா சமைச்சுண்டிருந்த வரைலதான், தாயோடு அறுசுவை உண்டி போம்ங்கறது சரிதான். அதுக்கப்பறம் மன்னியோட சமையல்தான், சும்மா சொல்லப்படாது எனக்கு பசிக்கும்னு காலம்பற ஏழரை மணிக்கே எல்லாம் தயார் செஞ்சுடுவா. மத்தியானம் எனக்கு டிஃபன்தான் வேணும். அதுனால ஒவ்வொரு தோசையா வாத்துப் போடுவா பொறுமையா, எனக்கு உப்புமா ரொம்ப புடிக்கும்னு சாயங்காலம் அடிக்கடி உப்புமா செஞ்சு வெச்சுடுவா. பொங்கல் என்னோட அம்மா, அக்கா, மன்னி இவா 3 பேரும் செஞ்சு சாப்பிடணும். என் ஊருலேர்ந்து என் நண்பன் மெட்றாஸ் வந்தா, எங்க மன்னி கையால பொங்கல் சாப்பிடவே எங்க வீட்டுக்கு வருவான், "அண்ணி, பொங்கல் செஞ்சு தாங்கன்னு" உரிமையோடு கேட்டு வாங்கி சாப்பிடுவான். எங்க அண்ணனும் ஒண்ணும் சொல்ல மாட்டான். என்ன விட 3 வயசு சின்னவாதான் என்னோட மன்னி. ஆனாலும் ஒரு மரியாதைல அம்மா மாதிரி அதிகாரம் செய்ய மாட்டேன். அதுவுமில்லாம நம்ம கேக்கறதுக்கு முன்னாடியே எல்லாம் கெடைக்கறப்ப எதுக்கு அதிகாரம் செய்யணும்.

இந்த ராஜோபசாரம் எல்லாம் கல்யாணம் ஆற வரைக்கும்தான். கல்யாணம்ங்கறது ஒரு மனுஷனோட வாழ்வுல ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்ங்கறது உண்மைதான். ஆனா எந்த வகைல அந்த மாற்றம் வரும்னு கடவுளால கூட கணிக்க முடியாது. தனியா போக வேண்டியதாப் போச்சு, பைசா கஷ்டமாச்சு. அக்கா வீட்டுலயும், மன்னி வீட்டுலயும் வந்து சாப்பிட்டு போக சொல்லுவாங்க. ஆனா பழைய உரிமையோட சாப்பிட முடியல. பெரும்பாலும் மதிய சாப்பாடு கட் வார நாள்ல. காலைல எப்படியோ ரெண்டு இட்லி (3 ரூபாதான்) தேத்திடுவேன். நைட் ஒரு தோசை இல்லேன்னா தயிர் சாதத்துக்கு 10 ரூபா தேத்தி வரும்போதே தட்டேந்தி பவன்ல முடிச்சுட்டு வந்துடுவேன். நிலையான வேலை இல்ல அந்த சமயத்துல.

இது மாதிரி ஒரு மூணு நாலு வருஷம் கஷ்டப் பட்டேன். அதுக்கப்பறம் நான் வேலைக்குப் போறதுக்கு முன்னாடி செஞ்ச பிசினஸ ஆரம்பிச்சு ஓரளவு ஸ்டெடியானேன். ஆனாலும் பெரும்பாலும் தனியாதான் இருக்க வேண்டியிருந்தது. ஓரளவு சூழ்நிலை சரியானதும் மறுபடி அக்கா, அண்ணா கூட அவங்க இருக்கற அபார்ட்மெண்ட்ஸ்லயே பக்கத்துல அக்காவோட ஃபிளாட்ல தங்கிக்கிட்டு பிசினஸ செஞ்சிட்டிருந்தேன். சில சமயம் எனக்கு தேவையானதை நானே சமைச்சுக்குவேன், சாப்பாடு மட்டும் அக்கா இல்ல அண்ணா வீட்டுல.

இன்னிக்கும் எனக்காக ஒரு குடும்பமே உழைக்குது. எங்க அக்கா குடும்பம்தான். எங்க அக்கா, அத்திம்பேர், அக்கா பையன், மருமகள்னு எனக்கு பசிக்காம பார்த்து பார்த்து செய்யறாங்க. கடவுளே அவங்களை நல்லா வெய்.

நீயா பேசியது?

"நீயா பேசியது?"

அவ என் அப்பாவோட நண்பரின் மகள். என் வயதுதான். அவளும் நான் படிக்கும் அதே வகுப்பு ஆனால் அவள் பெண்கள் பள்ளியில் நான் ஆண்கள் பள்ளியில். ஊரில் இரண்டே இரண்டு பள்ளிகள்தான். ஒண்ணு கிழக்கால இன்னொண்ணு மேக்கால. பருவம் வரும் வரை அவள் தோற்றம் சாதாரணமாகத்தான் இருந்தது. பின்பு நல்ல மாற்றம் அவளோட தோற்றத்துல. நடிகை சாரதா மாதிரி இருப்பா. நெறம் மட்டும் அவ்வளோ கருப்பு இல்லாம மாநிறம்.

அதுவரைக்கும் அவளை சட்டை செய்யாத எங்க பசங்க அவளை தொடர ஆரம்பிச்சாங்க. அவ ஒரு விநாயகர் கோவில் வழியாதான் ஸ்கூலுக்கு போகணும். பசங்க அங்க சாமி கும்பிடறா மாதிரி வெயிட் செய்வாங்க. அவ வந்ததும் அவ பின்னாடியே போயி ஸ்கூல் வரைக்கும் விட்டுட்டு வருவாங்க. அவ யாரையும் சட்டை செய்ய மாட்டா. அவ உண்டு அவ வேலை உண்டுன்னு இருப்பா. சில சமயம் அவ லேட்டா வந்தா பசங்களுக்கும் லேட்டாயிடும், ஓடி வந்து பி டி மாஸ்டர்கிட்ட அடிவாங்கிக்கிட்டு கிளாசுக்கு வருவாங்க, அதுலயும் ஒரு சந்தோஷம் அவங்களுக்கு, என்னமோ அவளுக்காக உயிரையே கொடுத்தா மாதிரி. என்னோட நண்பன் இன்னொருத்தன், போட்டி ஜாஸ்தி இருக்கறதால ஸ்கூல்வரை போகாம காலைல சீக்கிரம் கெளம்பி அவ வீட்டு வழியா ஸ்கூலுக்கு வருவான், அவ கண்ணுல படறாளான்னு பாக்க, அதே மாதிரி சாயந்திரம் கொஞ்சம் லேட்டா ஸ்கூலை விட்டு கெளம்பி அவ வீட்டு வழியா வீட்டுக்கு வருவான், எப்படியும் தினமும் ஒருவாட்டியாவது தரிசனம் கிடைச்சுடும்.

அவங்க அப்பா ஒரு பெரிய லாயரோட சொந்தக்காரர், அவர் கிட்ட உதவியாளாரா இருந்தாரு. அதுனால எங்க அப்பாவை சில கேஸ் விஷயமா பாக்க வருவாரு. நல்ல உயரம். அந்தக்காலத்துலேயே பேண்ட் போட்டு ஷர்ட்டை டக் இன் செஞ்சுட்டுதான் வருவாரு. இந்தப் பொண்ணும் அவர் மாதிரியே உயரம். 

சில சமயம் எங்க அப்பா ஸ்கூலுக்குப் போகும்போது அவர் வீட்டுக்குப் போயி அவரை வரச்சொல்லிட்டுப் போன்னு சொல்லுவாரு. அப்ப எப்பாவது அவளை பார்ப்பேன். ஒண்ணும் பேச்சு வார்த்தை கிடையாது. ஸ்கூல் முடிஞ்சு காலேஜ்ல பி யூ சி சேர்றப்ப அந்த வருஷம் காலேஜ்ல கோ எட் ஆக்கினாங்க. அதுனால அவளும் எங்க காலேஜ்லயே சேந்தா. அவ செகண்ட் க்ரூப். நான் ஃபர்ஸ்ட் க்ரூப். அவங்க க்ரூப்ல 19 கேர்ள்ஸ். எங்க க்ரூப்ல வெறும் மூணே பேர்தான். அந்த க்ரூப் பசங்க செம ஜாலியா இருப்பாங்க. ஒவ்வொரு இடைவேளையிலும், அந்த பொண்ணுங்க பின்னாடியே அலைஞ்சிட்டிருப்பாங்க. 
Image may contain: 1 person

டிகிரி நான் திருச்சில படிச்சேன். அவ தருமபுரியிலேயே படிச்சா. லீவுல அவ இருக்கற அதே தெருவில என் ஃபிரெண்ட் வீட்டுக்குப் போவேன். அந்த தெருவுல இன்னும் எனக்கு 4, 5 ஃபிரெண்ட்ஸ் இருந்தாங்க. அது ஒரு காலனி, லைனா ரெயில் பெட்டி மாதிரி வீடு. எல்லா வீடும் ஒரே மாதிரி இருக்கும். அங்க நாங்க எங்க ஃப்ரெண்ட்ஸ் வீடுகள்ல யார் வீட்டுல வேணும்ன்னாலும் விளையாடுவோம். அப்படி ஒரு நாள் வெளையாடிட்டிருக்கறப்ப நடுல நான் கடைக்குப் போய் ஏதாவது ஸ்நாக்ஸ் வாங்கிண்டு வரலாம்னு போனேன்,திரும்பி வர்றப்ப தவறுதலான ஒரு வீடு தள்ளி, அவ வீட்டுக்குள்ள நொழைஞ்சுட்டேன். வீட்டுல யாரும் இல்ல போல. அவ ஒரு ஸ்டூல்ல ஏறி எதோ படத்தை மாட்டிட்டிருந்தா. நான் வர்ற சத்தத்தைக் கேட்டு திரும்பினவ, ஸ்டூல் நொடிச்சு சரிஞ்சா, நான் ஓடிப் போய் அவளை புடிச்சிட்டேன். அவளுக்கு மொகம் செவந்து போச்சு. வெட்கத்தோட மெல்லிசா தேங்க்ஸ் சொன்னா. நான் சாரி சொல்லிட்டு வெளில வந்துட்டேன். 

அதுக்கப்பறம் எப்பவாவது பாத்தா ஒரு புன்சிரிப்பு. அவ்வளவோதான், அவளோட க்ளாஸ்மேட் எங்க தெருவில இருந்ததால சனி ஞாயிறு அடிக்கடி அவ வீட்டுக்கு வருவாங்க இவளும் இவ ஃப்ரெண்ட்ஸும். நான் எங்க வீட்டுல ஜன்னல் ஒட்டி டேபிள் சேர் போட்டிருப்பாங்க, அதுல ஒக்காந்து ஏதாவது படிச்சிட்டிருப்பேன். அப்ப ஒரு நேர் கொண்ட பார்வை அவளிடமிருந்து வரும் அவ்வளவுதான்.

காலச் சக்கரம் வேகமா சுழன்றது, அவ குடும்பத்துல அடுக்கடுக்கா சோக நிகழ்வுகள். நாங்களும் சென்னை வந்துட்டோம். எங்க அப்பா இறந்தப்பறம் அவங்க அப்பாவோட தொடர்பும் இல்லாததால அவங்க குடும்பம் பத்தி ஒண்ணுமே தெரியாம போச்சு. எப்பவாவது தருமபுரி வாழ்க்கையை மனசில் அசை போடறப்ப இவளும் ஏதாவது ஒரு சீன்ல வருவா. அவ்வளவுதான். அப்ப நெனைச்சுப்பேன் இவளுக்காவது நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கணும்னு.

கடவுள் எப்பவுமே சுகமோ, துக்கமோ சிலவுங்களுக்கேதான் அடுக்கடுக்கா கொடுப்பான். மெட்றாஸ்ல ஒரு நாள் பாண்டி பஜார்ல எதிர்பாராத விதமா அவளைப் பார்க்க நேர்ந்தது. ஆள் அப்படியே இருந்தா, ஆனா அவ திருமண வாழ்வும் சரியா அமையலையாம். ஆனா அந்த சோகமே மொகத்துல தெரியாம பழைய மாதிரியே இருந்தா. நான் அவ குடும்பத்தைப் பத்தி விசாரிக்க, அவ என் குடும்பத்தைப் பத்தி விசாரிச்சா. பக்கத்துல ஒரு கடைல கூல் ட்ரிங்க்ஸ் குடிச்சோம். 

கெளம்பரப்ப சொன்னா. "இப்ப பேசினா மாதிரி நீ அப்ப என்கூட பேசியிருக்கலாம், அப்பல்லாம் நீ என்கூட எல்லாம் பேச மாட்டே"

நான் பேச நினைத்ததெல்லாம் அவள் பேசிவிட்டு சென்றாள்.



அருகில் வந்தாள், உருகி நின்றாள்

"அருகில் வந்தாள், உருகி நின்றாள்"

எஸ் எஸ் எல் சி படிக்கறப்ப என் சித்தப்பா பையனுக்கு பூணூல் போட்டாங்க. அதுக்கு மேட்டூர் போனோம். அங்க சின்ன அத்தையோட வீட்டுக்காரர் (அத்திம்பேர்) அவர் பொண்ணோட வந்திருந்தார். பொண்ணு மூத்த தாரத்து பொண்ணு, அங்க அத்தை ரெண்டாம் தாரமா வாக்கப்பட்டாங்க. 1966 ல கல்யாணம் அரவங்காட்டுல. அப்ப எனக்கு 3 1/2 வயசு. இந்தப் பொண்ண கல்யாணத்துல பாத்த ஞாபகம். ஆனா அப்ப யாருன்னு தெரியாது. ரெண்டாம் தாரம்னு எல்லாம் தெரியாது, புரியவும் புரிஞ்சிருக்காது தெரிஞ்சிருந்தாலும். அதுக்கப்பறம் இப்பதான் அவங்கள பாக்கறோம். கல்யாணம் ஆனாவொடனே பூனா போயிட்டாங்க, அவருக்கு ORDINANCE FACTORYல வேல. அந்த பேக்டரி அரவங்காட்டுல, அப்பறம் பூனாலதான். அவங்க கல்யாணத்துக்கப்பறம் மொத மொதலா அவங்க கலந்துக்கற எங்க குடும்ப நிகழ்ச்சி. அத்திம்பேர் ரொம்ப ஜாலியான பேர்வழியா இருந்தாரு. பூணூல் முடிஞ்சு எங்க கூடவே தருமபுரி வந்து ரெண்டு நாள் இருந்துட்டுப் போனாரு. அந்தப் பொண்ணும் எங்க எல்லார் கூடவும் பழகிச்சு. அது என்னை விட ரெண்டு வயசு பெரியவ. ரெண்டு நாள் முடிஞ்சு அவங்க மெட்ராஸ்ல இருக்கற எங்க இன்னொரு அத்தை வீட்டுக்கு போயிட்டு அப்படியே பூனா போயிட்டாங்க. ஊருக்கு போயி எங்க அத்திம்பேர் அவரோட ஹீரோ சைக்கிளை எனக்கு அனுப்பி வெச்சாரு. அவருக்கு எங்க குடும்பத்தை ரொம்ப புடிச்சுப் போச்சு.

இந்த சந்தோஷம் ரொம்ப நாள் நிலைக்கல. ஒரு 6 மாசத்துக்குள்ள அத்திம்பேர் இறந்துட்டாரு. எங்க அம்மா மட்டும் பூனா போயிட்டு, அத்தையை கூட்டிக்கிட்டு எங்க வீட்டுக்கு வந்து ஒரு நாள் கழிச்சு மறுபடி பூனா கொண்டு போயி விட்டாங்க. 10 நாளைக்குள்ள தாய் வீடு வரலேன்னா அப்பறம் ஒரு வருஷம் வரக்கூடாதாம் அதுக்காக. எனக்கு அத்தைகிட்ட எப்படி ஆறுதல் சொல்றதுன்னு தெரியல. அவங்களும் ரொம்ப அமைதியா இருந்தாங்க.

அந்த வருஷம் சம்மர்ல ஒரு ஆச்சரியம், பூனா அத்தைப் பொண்ணு, சென்னை அத்தைப் பொண்ணோட தருமபுரி வந்தது. வந்து ஒரு 15 நாள் இருந்தது. எங்க பெரியம்மா பொண்ணு (அக்கா) வேற வந்திருந்தது. கூடவே ரெண்டு குடும்பத்துலேர்ந்தும் 4 குட்டிப் பசங்க, அறுந்த வாலுங்க வேற. ஒரே கும்மாளம்தான். சொந்தக்காரங்க வந்தா நாங்க ஒகேனக்கல் கூட்டிட்டுப் போயிடுவோம். செலவு கம்மி, ஜாலியாவும் இருக்கும். காலைல 6 மணிக்கு கெளம்பினா மாலைல 6 மணிக்குள்ள திரும்பி வந்துடலாம். 

இந்த தடவை பூனா அத்தைப் பொண்ணு நான் செய்யறதெல்லாம் அதிசயமா பார்த்து பாராட்டிட்டு இருந்துச்சு. நான் பாடறது, படம் வரையறது எல்லாம் அதுக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது. நான் அப்பதான் ஹிந்தி கொஞ்சம் கத்துக்கிட்டிருந்தேன். ப்ராத்மிக் பாஸ் செஞ்சிருக்கேன். என்னோட ஹிந்தியைக் கேட்டு கேலி செய்யும். திடீர்னு எங்க பெரியம்மா பொண்ணு சைக்கிள் கத்துத் தர சொல்லி கேட்டாங்க. எங்க அக்கா, பெரியம்மா பொண்ணு, அத்தைப் பொண்ணு மூணு பேருக்கும் கத்துத் தர வேண்டியதாப் போச்சு, எங்க அண்ணன் நைசா ஒதுங்கிட்டான். நாந்தான் 3 பேருக்கும் கத்துத் தந்தேன். அங்க அக்காவும் பெரியம்மா பொண்ணும் ரெண்டு நாளோட நிறுத்திட்டாங்க. அத்தை பொண்ணு மட்டும் ஒரு வாரம் கத்துக்கிச்சு.

ஆச்சு மெட்ராஸ் திரும்ப டைம் வந்துச்சி. நான் எங்க அம்மா கிட்ட கேட்டு நான் இவங்களை எல்லாம் கொண்டு போய் விடறேன், அப்படியே மெட்றாஸ்ல ரெண்டு வாரம் இருந்துட்டு வரேன்னு சொல்லி அவங்க கூட போனேன். அத்தை பொண்ணுங்க ரெண்டு பேரையும் எங்க அத்தைப் பையன் பஸ் ஸ்டாப் வந்து கூட்டிட்டுப் போயிட்டாரு. எங்க பெரியம்மா பொண்ணை நான் பெரியம்மா வீட்டுல விட்டுட்டு அங்க ஒரு வாரம் இருந்தேன். அங்க ஒண்ணும் எங்கயும் சுத்திப் பாக்கப் போகல. ஒரு தடவை பீச் போனதோட சரி. ஒரு வாரம் கழிச்சு எங்க மெட்றாஸ் அத்தை வீட்டுக்கு போனேன். அவங்க வீடு கீழ்ப்பாக் கார்டன்ஸ்ல இருந்தது. (அந்த அத்தையும் அத்திம்பேரும் காலமாயிட்டாங்க). அங்க எங்க அத்தைப் பசங்களும் ஜாலியா பழகுவாங்க. எல்லாரும் என்னை விட பத்திலிருந்து 15 வயசு வரை பெரியவங்க. 4 பேர். அங்க அத்தை பொண்ணே என்னை விட 10 வயசு பெரியவங்க. 

பகல்ல எல்லாரும் வேலைக்குப் போயிடுவாங்க, நான், எங்க மெட்ராஸ் அத்தைப் பொண்ணு, பூனா அத்தைப் பொண்ணு, மெட்ராஸ் அத்தையோட பெரிய பொண்ணு பசங்க, வாண்டுங்க மட்டும்தான். பாதி நேரம் அந்தப் பசங்களை சமாளிக்கறதிலேயே சரியாயிடும், அவங்க தூங்கின ஒடனே நாங்க சீட்டு, அந்தாக்ஷரி இது மாதிரி விளையாடுவோம். நான் கடைக்கு சென்று ஏதாவது பொருட்கள் வாங்கி வருவேன் நைட் டின்னர் தயார் செய்ய. அப்படி ஒரு நாள் போயிட்டு வரும்போது பூனா அத்தைப் பொண்ணு (மீனா) என்னுடைய ஜீன்ஸை மாட்டிக்கிட்டு ஒரு மீசை வரைஞ்சிக்கிட்டு என்னை மாதிரியே மிமிக்ரி செஞ்சு காமிச்சா, ஒரு கலாட்டாதான்.
Image may contain: drawing

நாங்க மூணு பேரும் ஒரு நாள் கெல்லீஸ் உமா தியேட்டர்ல சொல்லத்தான் நினைக்கிறேன் மார்னிங் ஷோ போனோம். அந்த சமயம் ஓமன், எக்ஸ்சார்சிஸ்ட் எல்லாம் ஓடிட்டிருந்தது. மீனாவுக்கு அது ரெண்டும் பாக்கணும்னு ஆசை. மெட்ராஸ் அத்தைப் பொண்ணு நான் வரலேன்னு சொல்லிட்டாங்க. ஒரு நாள் எல்லார்கிட்டயும் பர்மிஷன் வாங்கிகிக்கிட்டு ஓமன் ஈவினிங் ஷோ, தேவி தியேட்டருக்குக் கூட்டிப் போனேன். படம் வெளி வந்து ஒரு 3, 4 வாரம் ஆகியிருந்தது. தியேட்டர் முக்காவாசிதான் ரொம்பியிருந்தது. ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல அவ்வளவா கூட்டம் இல்ல. படம் ஒரு த்ரில்லிங்காவே போச்சு. ஒரு சீன்ல அந்தப் பேய்க்குழந்தை அதோட முகத்தை அவங்க அம்மாக்கு காமிச்சு மிரட்டும், அப்ப எல்லாரும் தியேட்டர்ல ஓன்னு கத்திட்டாங்க, இந்தப் பொண்ணு என்னோட கைய இறுக்கிப் புடிச்சவதான், படம் முடியற வரை விடல. பஸ்லயும் என் கையைப் புடிச்சுக்கிட்டே வந்தா. நைட் தூங்கறதுக்கு முன்னாடி விபூதி பூசிட்டு படுத்தா. எக்ஸார்சிஸ்ட் வரலேன்னு சொல்லிட்டா. (நான் தனியா ஈகா போய் நைட் ஷோ பாத்துட்டு வந்தேன்).

ஆச்சு அவ கெளம்பற நாளும் வந்தது. நான் சென்ட்ரல் போயி அவளை வழியனுப்ப போனேன். ட்ரெயின் கிளம்ப அரைமணி இருந்தது. பெட்டி எல்லாம் அவ சீட்டுல வெச்சுட்டு வெளில பெஞ்சுல உக்காந்தோம். அவ எதுவும் பேசல, காஃபி ரொம்ப புடிக்கும் அவளுக்கு, அதுவும் வேண்டாம்னுட்டா, நான் ரொம்ப கம்பல் பண்ணி கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி கொடுத்தேன். குடிச்சிட்டு அமைதியாவே இருந்தா. 10 நிமிஷம் இருக்கும் ட்ரெயின் கிளம்ப. மெதுவா சொல்லத்தான் நினைக்கிறேன் பாட்டை ஹம் செஞ்சா, முதல் ரெண்டு வரிகளான சொல்லத்தான் நினைக்கிறேன், உள்ளத்தால் தவிக்கிறேன் மட்டும் திருப்பி திருப்பி ஹம செஞ்சா. அப்பறம் நான் அவளை நேரமாச்சு நீ சீட்டுல போயி உக்காந்துக்கோன்னு சொன்னேன். அவ ட்ரெயின் ஏறி வாசப்படி கிட்டயே நின்னிட்டிருந்தா, ட்ரெயின் கிளம்ப சிக்னல் விழுந்தது. அவ கண்ணுலேர்ந்து பொலபொலன்னு கண்ணீர். எனக்கு ஒன்னும் புரியல, ஒரு அரை நிமிஷம் என் கையைப் புடிச்சிக்கிட்டா. அப்பறம் கதவு கிட்டயே நின்னு கண்ணிலிருந்து மறையற வரை டாட்டா காமிச்சிக்கிட்டே போனா. அவ அழுதது எனக்கு ஒரு மாதிரி இருந்தது. ஏன் அழுதான்னு என்னால சரியா தீர்மானிக்கவும் முடியல. ஆனா என் மனசுலயும் எதோ பாரம்.

அப்ப எனக்குத் தோன்றிய வரிகள் 
"உந்தன் மனத்தைக் கொண்டு செல்லவா
எந்தன் மனத்தைத் தந்து செல்லவா"

(சிறிது நாட்களில் அவளது அப்பா வேலை அவளுக்குக் கிடைத்து விட்டது. ஒரு ஆங்கிலோ இந்தியனை திருமணம் செய்து கொண்டு விட்டாள் என்று அத்தை சொன்னார்கள். அதற்கு பிறகு அவளுக்கும் எங்கள் அத்தைக் குடும்பத்திற்கும் தொடர்பு இல்லை. ஏழெட்டு வருடங்களுக்குப் பிறகு அவள் இறந்து விட்டாள் என்றும் அவள் கணவன் அவளுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்று விட்டான் என்றும் 25 வருடங்களுக்குப் பிறகுதான் தெரிய வந்தது. மூன்றாம் பிறையாக என் வானில் வந்து மறைந்து விட்டாள்) 



Saturday, June 23, 2018

கனவில் கண்ட திருமுகம்

"கனவில் கண்ட திருமுகம்"

"ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு, கனவினிலே என் அவள் வந்தாள்"

உண்மையிலே அது ஒரு நிலாக் காலம். இருபதுகளில் என் வயது. யார் பின்னும் அலைந்ததில்லை. ஆனால் அழகை ஆராதனை செய்வேன். அதில் தவறில்லை. அப்படி ஒரு நாள். இன்றும் பசுமையாய் என் நினைவில் இருக்கிறது அந்த கனவு. கனவிலே என் அவள் வந்தாள். அவளை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. ஆதலால் பாரதியின் வார்த்தைகளில் வர்ணிக்கிறேன்.

மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன் 
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை 
பொங்கிவரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும் 
புன்னகையின் புது நிலவும் போற்ற வரும் தோற்றம் 
துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து 
தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்.
அங்கதனை கண்விழித்தேன் அடடா, ஓ அடடா 
அழகெனும் தெய்வம்தான் அதுவென்று அறிந்தேன்.

பாரதியின் வர்ணனைகள் அவளுக்கு அப்படியே பொருந்தும். கனவில் உண்மையிலேயே அவள் என்னை எழுந்து அவளைப் பார்க்க சொன்னாள். ஒருவேளை பாரதியின் பாடலை அப்போதைய சமீபத்தில் கேட்டிருந்தேனா என்பது தெரியவில்லை. எனக்கு இப்பாடல், குறிப்பாக சி எஸ் ஜெயராமன் குரலில் மிகவும் பிடிக்கும். தூங்காதே என்று அவர் ஒரு சிறிய நிறுத்தம் கொடுத்து பாடும் அழகே தனி. அந்த நினைவில் அந்தக் கனவு வந்ததா என்று தெரியவில்லை. ஆனால் உண்மை போலவே இருந்தது. உண்மையிலேயே அவள் அழகெனும் தெய்வம்தான். எனக்கு ஒரு அனுபவம் உண்டு. எதாவது விசித்திரக் கனவு வந்தால் அது ஒரு வாரம், பத்து நாட்கள் மறுபடி மறுபடி வரும். அது போல் இது மறுபடி வருமா என்று நப்பாசை. பேய்க் கனவுகளும் குரங்குக் கனவுகளும்தான் அப்படி வரும் போலிருக்கிறது. இது வரவில்லை, ஆனால் அது ஆழப் பதிந்து விட்டது.

நீங்கள் சில திரைப் படங்களில் பார்த்திருப்பீர்கள், கனவில் ஒரு பெண்ணைக் கண்டு ராஜகுமாரன் அதே பெண்ணுக்காக காத்திருப்பதும் தேடி அலைவதும். எனக்கு அது சற்று விசித்திரமாக இருக்கும். ஆனால் என்னுடைய நிலை இப்படி ஆயிற்று. நான் பார்க்கும் பெண்களிலெல்லாம் அவள் முகத்தைத் தேடத் துவங்கினேன். சிலர் என்னை சந்தேகத்துடன் பார்க்கத் துவங்கினார்கள். அவன் பார்வையே சரியில்லை என்ற பேச்சுக்களும் என் காதில் அவ்வப்போது விழுந்தன. நான் அதையெல்லாம் சட்டை செய்யவில்லை.
Image may contain: 1 person, text

வீட்டில் திருமணப் பேச்சு எடுக்கத் துவங்கினார்கள். நான் பிடி கொடுக்கவில்லை. மீறி வரும் ஜாதங்களை நான் வேறு யாருக்காவது அனுப்பி விடுவேன். இப்படியே காலம் சென்று கொண்டிருந்தது, நான் ஒரு வரைகலை நிறுவனம் சொந்தமாக வைத்திருந்தேன். நடுவில் ஒரு ஐந்து வருடங்கள் வேலைக்குப் போனேன். அப்போது கட்டாயப் படுத்தி திருமணம் செய்து வைத்து விட்டார்கள். அது தனிக்கதை. பிறகு சில காலம் பயங்கரக் கஷ்டம். எந்த வேலையும் சரிப்படவில்லை. வயதும் 40 தாண்டி விட்டது. வீட்டில் தாளவொண்ணாத பிரச்சினை. யாருக்கும் தெரியாமல் ஒரு ஹோட்டலில் கூட வேலை செய்தேன். அப்போதும் பிடுங்கல்கள் தாங்கவில்லை. விரக்தியும் கோபமும் தாளாமல், என்னை விட்டு விடுங்கள், நான் பழையபடி GRAPHIC DESIGNING & PRINTING பிசினஸ் செய்கிறேன் என்று ஒரு நாள் சத்தம் போட்டு விட்டு முதலில் கம்பெனி பெயரில் ஒரு பேங்க் அக்கவுண்ட் ஆரம்பித்தேன். (FANTASY UNLIMITED). அதிர்ஷ்டம், ஒரு லண்டனை சேர்ந்த தமிழ் பிசினஸ்மேன் சில ஆர்டர் கொடுத்தார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு அயராத உழைப்பினால் MNC ஆர்டர் எல்லாம் வரத் துவங்கின. 

அப்படி ஒரு நாள் ஒரு பெரிய கம்பெனிக்கு அதன் எம் டியை சந்திக்க வேண்டியிருந்தது. சற்றுக் காத்திருந்து அழைப்பு வந்தவுடன் உள்ளே சென்றேன். என்ன அதிசயம், பாரதியின் அழகுத் தெய்வம். பதவிக்கேற்றவாறு அதே ஆணையிடும் தொனி. அந்த கம்பெனியின் ப்ராஜெக்ட் பெரிய ப்ராஜெக்ட்டாக இருந்ததால் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. சில சமயம் ஹோட்டல்களில் டின்னருடன் டிஸ்கஷன். அப்படிப்பட்ட ஒரு சமயத்தில் குடும்பத்தைப் பற்றிய விசாரிப்புகள். நான் சுருக்கமாக சொன்னேன் என் குடும்பத்தைப் பற்றி. அவளைப் பற்றி கேட்டேன். அவள் சொன்னாள்.

"என் கனவில் வந்த நாயகனைக் காணவே முடியவில்லை, எனவே அப்படியே இருந்து விட்டேன்" என்று.

யாரென்று கேட்டு மனதை நோகச் செய்ய விரும்பவில்லை (இருவர் மனதையும்தான்).

நன்றி: ஓவிய நண்பர் ஷ்யாம் ஷங்கர்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா

"பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா"

திருச்சியில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்த சமயம். ஒரு நாள் மெயின்கார்ட் கேட் பஸ் ஸ்டேண்டுல ரூட் 64 - துப்பாக்கித் தொழிற்சாலை போற வண்டி - எங்க காலேஜ்குள்ள கொண்டு போய் விடும். அதுனால நெறைய பேர் அதுலதான் ஏறுவோம். நான் இதுக்காகவே மெயின்கார்ட் கேட் போய் ஏறுவேன், உக்காந்தும் போகலாம். நான் உக்காந்து மேத்ஸ் ரிவைஸ் செஞ்சுட்டே வருவேன். அப்படி ஒரு நாள் - அழகிய காலையாக இருந்தது, தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்ட பொழுது. நவம்பர் மாதம் ஆதலால் வண்டி புறப்பட்டதும் சில்லென்று ஒரு காற்று முகத்தில் வீசியது, ரம்மியமான காலை. அப்போது காதில் மெதுவாக "ஏழு ஸ்வரங்களுக்குள்" பாடலின் ஹம்மிங் கேட்டது. சட்டென்று திரும்பிப் பார்த்தால், அன்றலர்ந்த அல்லிப்பூ, வெட்கத்துடன் புன்னகை பூத்தது. நான் பதிலுக்கு புன்னகை பூத்துவிட்டு (அசடு வழிந்து என்பதுதான் சரியான வார்த்தைப் பிரயோகம்) திரும்பிக் கொண்டு புத்தகத்தை மூடி விட்டு, ஹம்மிங் தொடர்கிறதா என்று உற்றுக் கவனித்தேன். இல்லை. அதற்கப்புறம் ஏதுவும் இல்லை. 

அவள் பேரழகு இல்லை. ஆனால் பளிச்சென்று திருத்தமான முகம். எவரையும் வசீகரித்து விடும் சிரிப்பு. எப்போதும் நெற்றியில் பொட்டு தவறாது இருக்கும். அந்த பொட்டு நிலவிற்கு பொட்டு வைத்தது போல் இருக்கும். 
Image may contain: 1 person

அடுத்த ஓரிரு நாட்கள் பஸ் கிளம்பியவுடன் பின்னால் திரும்பிப் பார்ப்பது வழக்கம் அவள் இருக்கிறாளா என்று. ஆனால் வேறு எங்காவது அமர்ந்திருப்பாள். ஆனால் அங்கிருந்து என்னைப் பார்த்து ஒரு புன்னகை மட்டும் தவறாமல். மனதில் வசந்த காலங்கள் இசைந்து பாட ஆரம்பித்தன. ஒரு நாள் அவளைக் காணவில்லை. பஸ் கிளம்பியும் வரவில்லை. சரி என்று நான் படித்துக் கொண்டு வந்தேன். பஸ் மரக்கடை ஸ்டாப்பில் நின்றது. அப்போது ஏதோ குறுகுறுவென்றிருக்கவே ஜன்னல் வழியே வெளியே பார்த்தால் தருமபுரியில் என்னுடன் படித்த பெண் இன்னொரு பஸ்ஸிலிருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் அவளைப் பார்த்து சிரிக்கவே அவளும் சிரித்தாள். அப்போது பின்னாலிருந்து கனைக்கும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால், நிலா! ஆனால் அப்போது சூரியனின் வெம்மை முகத்தில். போதாக்குறைக்கு தருமபுரி பெண் என்னைப் பார்த்து கையாட்டி வேறு சென்று விட்டாள். அடுத்த 15 நாளும் அமாவாசைதான்.

சிறிது நாட்கள் சென்று இடைவேளையில் என்னுடைய வகுப்பில் படிக்கும் பெண்ணுடன் வந்தாள். என்னுடைய மேத்தமேடிக்கல் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் புத்தகம் வேண்டும் என்று. அப்போதுதான் பெயர் தெரிந்தது. அது வரை நிலா என்றுதான் பெயர் வைத்திருந்தேன். மறுபடியும் அவ்வப்போது புன்னகை கிடைக்கும், வேறு பேச்சு எதுவும் இல்லை.

சில நாட்கள் கழிந்தது. ஒரு நாள் மாலை பிசிக்ஸ் லேபிலிருந்து கிடார் இசை, தப்லா ஒலி, பாட்டு சத்தம் எல்லாம் கேட்கவே எட்டிப் பார்த்தேன். திருச்சி வானொலி நிலையத்தில் இளைய பாரதம் நிகழ்ச்சிக்கு எங்கள் கல்லூரியிலிருந்து பங்கு பெறுவதற்கு பயிற்சி நடந்து கொண்டிருந்தது. விடுவோமா நம்ப. பாங்கோஸ் வாசிக்க போயிட்டேன். மொதல்லயே இது பத்தி தெரியாததால எனக்கு அதுக்கு மட்டும்தான் சான்ஸ் கிடைச்சுது. நம்ம அதுக்காகவா போனோம். நம்ம நிலாதான் அங்க மெயின் பாடகி. அதுக்குத்தானே, சில பாடல்கள் பாடி முடிச்சதும். நான் நிலாவை ஏழு ஸ்வரங்களுக்குள் பாட சொன்னேன். அவளும் பாடினா. எல்லாருக்கும் ஆச்சரியம், ப்ரொஃபசர்ங்க உட்பட. இவன் ஏன் இந்தப் பாட்ட குறிப்பா பாட சொல்றான்னு. 

அப்படியே அப்பப்ப எதாவது பேச்சு வார்த்தை நடந்திட்டிருந்தது. 3 ஆம் வருஷம் படிக்கறப்ப திருச்சில இருக்கற எல்லாக் கல்லூரிகளுக்கும் கல்ச்சுரல் காம்பெடிஷன். எங்க காலேஜ் அப்பத்தான் முதல் முறையா கலந்துக்கப் போவுது, இன்ஸ்ட்ருமென்ட்ஸ் ரெண்டே ரெண்டுதான். ஒரு கிடார். பாங்கோஸ். அதுல ப்ராக்டிஸ் செஞ்சு ப்ரோக்ராம் நடக்கறப்ப வேற காலேஜ் பசங்க கிட்ட கேட்டு எலெக்ட்ரிக் கிடார், ட்ரிபிள் காங்கோ கடன் வாங்கி வாசிச்சுக்கலாம்னு பிளான். நான் அவளுக்காகவே ரெண்டு பாட்டு "ஆசையை காத்துல தூது விட்டு" "மேகமே மேகமே ரெண்டும் செலெக்ட் செஞ்சேன். ப்ரோக்ராம் நம்ம பொறுப்புல விட்டாங்க, மொதோ பாட்டே ஆசையைக் காத்துல தூது விட்டு, கிடாரிஸ்ட் அருமையான பிளேயர். எல்லா மெயின் வாத்தியங்கள் ஒலிகளையும் அதில் மேனேஜ் செஞ்சான். நான் ட்ரிபிள் காங்கோ. மொத பாட்டு சூப்பரா அமைஞ்சது. ப்ரோக்ராம்க்கு மொத நாள் தான் ஃபர்ஸ்ட் இயர் பையன் ஒருத்தன் வந்தான், அப்படியே ஜேசுதாஸ் மாதிரியே பாடுவான். அவனை வெச்சு அப்பத்தான் பிரபலமா இருந்த கண்ணே கலைமானே ரெண்டாவது பாட்டா போட்டோம். அப்பறம் இளைய நிலா, தோகை இளமயில்னு பாடி, கடைசில மேகமே மேகமேல முடிச்சோம். அதுக்கு தப்லா கூட இல்ல. அவ கொரல நம்பிதான். எங்களுக்கு ப்ரைஸ் கிடைக்கல, ஆனா எல்லாரும் பாராட்டினாங்க எங்க பர்ஃபாமன்ஸ் ரொம்ப நல்லா இருந்ததுன்னு. ப்ரோக்ராம் முடிஞ்சு முத்தரசநல்லூர் போகணும் எங்க வீட்டுக்கு அதுனால பஸ் ஸ்டான்ட் வரைக்கும் துணை வரை சொன்னா. அதுவும் எப்படி தெரியுமா, "நீ என்னோட துணைக்கு வருவியா?" அப்படின்னு ஒரு பாஸ் "பஸ் ஸ்டான்ட் வரைக்கும்" அப்படின்னு. என்னத்த சொல்ல. பஸ் ஸ்டான்ட் வரை போய் பஸ் ஏத்திட்டு வந்தேன், எதோ பேசிட்டு போனோம். 

அதுக்கப்புறம் காலேஜ்ல எப்பவாவது ஒரு வார்த்தை ரெண்டு வார்த்தைதான், நான் தமிழ்ப் பட பாடல்கள் எல்லாம் எழுதி ஒரு டயரி வெச்சிருக்கேன். அதை கேட்டு வாங்கிப் போனா. அப்பறம் நானே வெச்சுக்கறேன்னு சொன்னா. காலேஜ் முடிஞ்சு போறப்ப என்னோட அட்ரஸ் வாங்கிகிக்கிட்டு அவ அட்ரஸ் குடுத்தா. போறதுக்கு முன்னாடி என்னை ஆழமா ஒரு பார்வை பாத்தா. அட்ரஸ் வாங்கியும் யாரும் லெட்டர் போட்டுக்கல. எங்க ஃ ப்ரெண்ட்ஷிப் எப்படிப் பட்டதுன்னு எங்களாலேயே கணிக்க முடியல. 

காலம் அப்படியே ஓடிப் போச்சு. 2002 னு நினைக்கறேன், என் அண்ணா பொண்ண ஸ்கூல்ல விடப் போனேன். அங்க பாத்தா அவ க்ளாஸ் டீச்சர் இவதான். கொஞ்ச நேரம் க்ஷேம நலன் விசாரிச்சா. அப்பறம் சொன்னா. நான் 1996லதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எதுக்காக காத்திருந்தேன்னு தெரியலன்னு சொன்னா. நான் சொன்னேன் நான் 1998லதான் (36 வயசுல) அப்டின்னவொடனே அப்படியே தெகைச்சுப் போய் பாத்தா.

அவ கடைசியா பேசினது. "ஏதோ மிஸ் பண்ணிட்டோம், என்ன எதிர்பார்த்தோம்னு தெரியாமலேன்னு" 

அப்பறம் கேட்டா "உனக்கு எதனை குழந்தைங்க"

"ரெண்டு பெண் குழந்தைங்க, பெரியவ பேரு ரம்யா" நான். 

நிலவின் முகத்தில் மூன்றாம் பிறை போன்று ஒரு புன்னகை. பிறகு வகுப்புக்கு சென்று விட்டது நிலவு. நான் அவள் பிள்ளைகளைப் பற்றிக் கேட்கவில்லை. கேட்பானேன், பிறகு வருத்தப்படுவானேன் என்று. அதுவே எங்கள் கடைசி சந்திப்பு. அவள் எங்கு இருக்கிறாள் என்று நானும் நான் எங்கு இருக்கிறேன் எங்கு அவளும் கேட்கவில்லை. என் அண்ணா பெண்ணையும் அடுத்த வருடம் வேறு ஸ்கூல் மாற்றி விட்டோம். 

"பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர்ப் புன்னகையில் என்னை சுட்ட நிலா 
என் மனதில் அம்பு விட்ட நிலா - இது 
எட்ட நின்று என்னைத் தொட்ட நிலா"

ஓவியம் - இளயராஜா

Thursday, June 14, 2018

ராசாத்தி ஒரு ரோசாப்பூ

"ராசாத்தி ஒரு ரோசாப்பூ"

"என்ன காளியம்மா, பேத்தியை அழைச்சுக்கிட்டு வந்திருக்கே?"

"ஆமாம் அயிரம்மா, செட்டியார் வூட்டுல வேலைக்கு கூப்பிட்டிருக்காங்க, நான் அங்க போறேன், நீங்க இவளை எனக்கு பதில் வேலைக்கு வெச்சுக்குங்க"

அந்த சிறுமிக்கு 10 வயதுதான் இருக்கும். சீட்டி பாவாடை சட்டை போட்டு, ரெட்டைப் பின்னல் பின்னி பளிச்சென்றிருந்தாள். அவள் பாட்டி எங்கள் வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்களை அவர்களுக்கு நிலத்தைக் குத்தகை விட்ட உரிமையாளர் வீட்டில் வேலைக்கு ஆள் வேண்டுமென்று கேட்டதால் இவளை எங்கள் வீட்டில் வேலை செய்ய அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள். 

அவள் பெயர் ராசாத்தி. வெளிர் நிற ரோஸ் கலரில் இருந்தாள். நடிகை அஞ்சலிதேவியை நினைவுபடுத்தும் முகம். அதே போன்ற புன்னகை எப்போதுமே முகத்தில் தவழும்.

"ரொம்ப சின்னப் பொண்ணா இருக்குதே, வேலை நல்லா செய்யுமா?"

பாட்டி பதில் சொல்வதற்குள் ராசாத்திக்கு ரோசம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. 

"எல்லாம் செய்வேன், ராசாத்தி வேல ரோசாப்பூ மாதிரி இருக்கும்" என்றாள் 

"அடடே ரோஷத்தைப் பாரு" என்று என் அம்மா பரிகாசம் செய்ததும் அவள் முகம் சிவந்து விட்டது.

அவளை விட்டு விட்டு பாட்டி சென்று விட்டார்கள். சில வேலைகளை மட்டுமே அம்மா சொல்ல வேண்டியிருந்தது. மீதி வேலைகளை அவளே பார்த்து பார்த்து செய்தாள். சிறிய பெண்ணாயிருந்ததால் எங்கள் வீட்டிலேயே தங்க வைத்துக் கொண்டோம். நாங்கள் உடன்பிறந்தவர்கள் மூன்று பேர். அக்கா 6 வயது. அண்ணன் 4 வயது, நான் 3. வீட்டு வேலைகளுக்கிடையில் எங்களையும் கவனித்துக் கொண்டு, குளித்து வருவதற்குள் புதிய உடைகள் எடுத்து வைப்பது, அக்கா பள்ளி செல்ல புத்தகங்களை தயாராக வைப்பது, அக்காவை ஸ்கூல் வரை கொண்டு சென்று விடுவது என்று துளியும் அசராமல் வேலை செய்வாள். 

பசி என்று கேட்கமாட்டாள். எங்கள் அம்மா கூப்பிடும்போதுதான் சாப்பிட வருவாள். எங்கள் அம்மா அவளை வேலைக்காரியாகவே நடத்தவில்லை. அவளுக்கும் என் அம்மா மீது அலாதி பிரியம். அதைக் கண்ட எங்கள் அப்பா எங்கள் அம்மாவிடம் சண்டை போடுவது போல் நடிப்பார். உடனே இவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வரும். அப்பாவுடன் பயங்கரமாக சண்டை போடுவாள். ஒரு முறை அப்பா அம்மாவை அடிப்பது போல் பாவனை செய்ய ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு அப்பாவை விரட்ட ஆரம்பித்து விட்டாள். அம்மா சொல்லித்தான் நிறுத்தினாள்.

நான் சின்னப் பையனாக இருப்பதால் என்னை வம்பிழுத்துக் கொண்டே இருப்பாள். ஒவ்வொரு முறை அம்மா சம்பளம் கொடுக்கும்போதும். "அம்மா எனக்கு சம்பளம் வேண்டாம், இவனைக் கட்டிக் குடுத்துடுங்க" என்று கிண்டல் செய்வாள். நான் சந்தேகத்துடன் அம்மாவிடம் அப்படி செய்வியா என்று கேட்டேன், அம்மா பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டு போய் விட்டாள். இந்தக் காட்சி அடிக்கடி நடக்கும்.

திடீரென்று அவளுடைய பாட்டி அவளை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்கள். ஆகவே அவளது அம்மா, கண்ணம்மா, வேலைக்கு வர ஆரம்பித்து விட்டார்கள். (இவங்களைப் பாத்துதான் விசு சம்சாரம் அது மின்சாரம் படத்துல கண்ணம்மா கேரக்டரையே வெச்சாரு, அப்படியே இருப்பாங்க, இவங்களை வெச்சு ஒரு நாவலே எழுதலாம்).

நான்கைந்து நாட்கள் கழித்து அவளது அம்மாவுடன் ராசாத்தி வந்தாள். எங்க ராசாத்தி ஆளைக் காணும்னு கேட்டேன். எனக்கு கல்யாணம், அதுக்குதான் உன்னைக் கூட்டிட்டுப் போக வந்தேன் என்று சொன்னாள். எனக்கு பயம். அம்மாவிடம் கேட்டதற்கு அம்மா பயப்படாதே, அவளோட மாமனுக்கு அவளை கல்யாணம் பண்ணி வெக்கறாங்க என்று அம்மா சொன்னதும்தான் நிம்மதி. இந்த வயசுல கல்யாணமான்னு மட்டும் தோணிச்சு.

Image may contain: 1 person, smiling

கல்யாணத்துக்கு போனோம். குழந்தைக்கு புடவை கட்டினா மாதிரி இருந்தது. அப்பவும் குறும்பு மாறாமல் தன் புருஷனிடம், "இந்த மைனரைத்தான் கட்டிக்கலாம்னு இருந்தேன், இது மாட்டேன்னுடிச்சி, அதான் உங்களைக் கட்டிகிட்டேன்" என்று சொன்னாள். அவள் புருஷனுக்கும் எங்கள் குடும்பத்தை நன்கு தெரியும், அவரும் என்னைப் பார்த்து பலமாக சிரித்தார்.

அப்புறம் மாதம் ஒரு முறை வந்து போவாள். பிறகு அது தேய்ந்து வருடம் 3 முறை என்று ஆயிற்று. தங்க சிலை மாதிரி இருந்தவள், அலங்காரம் செய்யாத அம்மன் போல களையிழந்து தோற்றமளிப்பாள். எங்கள் அம்மாவிடம் எதோ சொல்லி அழுவாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. கொஞ்சம் வளர்ந்த பிறகுதான் தெரிந்தது அவன் ஒரு குடிகாரன் என்று. வேலைக்கு செல்வான், இவளை துன்புறுத்த மாட்டான், ஆனால் பைசா தரமாட்டான் வீட்டிற்கு. இருக்கின்ற நிலத்தில் விவசாயம் செய்து அவள் தன் இரண்டு பையன்களையும் பெண்ணையும் வளர்த்தாள்.

வருடங்கள் உருண்டோடின. நாங்கள் சென்னை வந்து குடியேறி விட்டோம். என் அப்பா, தொடர்ந்து அம்மா மறைவு என்று சொந்த ஊருக்கு செல்வது குறைந்து விட்டது. என்னுடைய திருமண வாழ்வும் சரியாக இல்லை. 2010ல் ஒரு நாள் எதோ தோன்ற சொந்த ஊருக்கு சென்றேன். நண்பர்களை சந்தித்தேன், ராசாத்தி வீட்டிற்கும் சென்றேன். அவள் புருஷன் இறந்து விட்டிருந்தார். குடிதான் காரணம். ஆனால் ஒரு கோடி மதிப்புள்ள நிலங்கள் விட்டு சென்றிருந்தார். அரசு மருத்துவமனையில் டிரைவராக இருந்தபோது இறந்து விட்டதால் இழப்பீடும், ஓய்வூதியத் தொகையும் வேறு இவளுக்கு வந்தது. அவள் முகத்தில் சிறிதும் சோகம் இல்லை. ஞானியைப் போல இருந்தாள்.

"என்ன ராசாத்தி, உன் புருஷன் உன்னை இப்படி விட்டுவிட்டு போயிட்டாரே" என்று கேட்டேன். அதற்கு அவள் சொன்னாள், பெரிய அளவில் தனக்கு எதுவும் துக்கமில்லை என்று. ஏன் என்று கேட்டேன். அதற்கு அவள் "அவர் ஒரு ஜென்டில்மேனா இருந்தாரு" என்றாள். புரியாமல் பார்த்தேன், குடியும் குடுத்தனமுமாக (வேறு சில தொடர்புகள்) இருந்தார் என்றாள். ஜென்டில்மேனுக்கு அவள் சொன்ன விளக்கத்தைக் கேட்டு எனக்கு சிரிப்பு வந்தது.

"ராசாத்தி, நீ சொன்ன மாதிரி என்ன கல்யாணம் பண்ணிட்டிருந்தா, இப்ப இப்படி ஆயிருக்குமா?" என்று கேட்டேன்.

"ஆமாடா, உனக்கும் இந்த பிரச்சினை வந்திருக்காது" என்றாளே பார்க்கலாம்.