Thursday, June 14, 2018

ராசாத்தி ஒரு ரோசாப்பூ

"ராசாத்தி ஒரு ரோசாப்பூ"

"என்ன காளியம்மா, பேத்தியை அழைச்சுக்கிட்டு வந்திருக்கே?"

"ஆமாம் அயிரம்மா, செட்டியார் வூட்டுல வேலைக்கு கூப்பிட்டிருக்காங்க, நான் அங்க போறேன், நீங்க இவளை எனக்கு பதில் வேலைக்கு வெச்சுக்குங்க"

அந்த சிறுமிக்கு 10 வயதுதான் இருக்கும். சீட்டி பாவாடை சட்டை போட்டு, ரெட்டைப் பின்னல் பின்னி பளிச்சென்றிருந்தாள். அவள் பாட்டி எங்கள் வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்களை அவர்களுக்கு நிலத்தைக் குத்தகை விட்ட உரிமையாளர் வீட்டில் வேலைக்கு ஆள் வேண்டுமென்று கேட்டதால் இவளை எங்கள் வீட்டில் வேலை செய்ய அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள். 

அவள் பெயர் ராசாத்தி. வெளிர் நிற ரோஸ் கலரில் இருந்தாள். நடிகை அஞ்சலிதேவியை நினைவுபடுத்தும் முகம். அதே போன்ற புன்னகை எப்போதுமே முகத்தில் தவழும்.

"ரொம்ப சின்னப் பொண்ணா இருக்குதே, வேலை நல்லா செய்யுமா?"

பாட்டி பதில் சொல்வதற்குள் ராசாத்திக்கு ரோசம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. 

"எல்லாம் செய்வேன், ராசாத்தி வேல ரோசாப்பூ மாதிரி இருக்கும்" என்றாள் 

"அடடே ரோஷத்தைப் பாரு" என்று என் அம்மா பரிகாசம் செய்ததும் அவள் முகம் சிவந்து விட்டது.

அவளை விட்டு விட்டு பாட்டி சென்று விட்டார்கள். சில வேலைகளை மட்டுமே அம்மா சொல்ல வேண்டியிருந்தது. மீதி வேலைகளை அவளே பார்த்து பார்த்து செய்தாள். சிறிய பெண்ணாயிருந்ததால் எங்கள் வீட்டிலேயே தங்க வைத்துக் கொண்டோம். நாங்கள் உடன்பிறந்தவர்கள் மூன்று பேர். அக்கா 6 வயது. அண்ணன் 4 வயது, நான் 3. வீட்டு வேலைகளுக்கிடையில் எங்களையும் கவனித்துக் கொண்டு, குளித்து வருவதற்குள் புதிய உடைகள் எடுத்து வைப்பது, அக்கா பள்ளி செல்ல புத்தகங்களை தயாராக வைப்பது, அக்காவை ஸ்கூல் வரை கொண்டு சென்று விடுவது என்று துளியும் அசராமல் வேலை செய்வாள். 

பசி என்று கேட்கமாட்டாள். எங்கள் அம்மா கூப்பிடும்போதுதான் சாப்பிட வருவாள். எங்கள் அம்மா அவளை வேலைக்காரியாகவே நடத்தவில்லை. அவளுக்கும் என் அம்மா மீது அலாதி பிரியம். அதைக் கண்ட எங்கள் அப்பா எங்கள் அம்மாவிடம் சண்டை போடுவது போல் நடிப்பார். உடனே இவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வரும். அப்பாவுடன் பயங்கரமாக சண்டை போடுவாள். ஒரு முறை அப்பா அம்மாவை அடிப்பது போல் பாவனை செய்ய ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு அப்பாவை விரட்ட ஆரம்பித்து விட்டாள். அம்மா சொல்லித்தான் நிறுத்தினாள்.

நான் சின்னப் பையனாக இருப்பதால் என்னை வம்பிழுத்துக் கொண்டே இருப்பாள். ஒவ்வொரு முறை அம்மா சம்பளம் கொடுக்கும்போதும். "அம்மா எனக்கு சம்பளம் வேண்டாம், இவனைக் கட்டிக் குடுத்துடுங்க" என்று கிண்டல் செய்வாள். நான் சந்தேகத்துடன் அம்மாவிடம் அப்படி செய்வியா என்று கேட்டேன், அம்மா பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டு போய் விட்டாள். இந்தக் காட்சி அடிக்கடி நடக்கும்.

திடீரென்று அவளுடைய பாட்டி அவளை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்கள். ஆகவே அவளது அம்மா, கண்ணம்மா, வேலைக்கு வர ஆரம்பித்து விட்டார்கள். (இவங்களைப் பாத்துதான் விசு சம்சாரம் அது மின்சாரம் படத்துல கண்ணம்மா கேரக்டரையே வெச்சாரு, அப்படியே இருப்பாங்க, இவங்களை வெச்சு ஒரு நாவலே எழுதலாம்).

நான்கைந்து நாட்கள் கழித்து அவளது அம்மாவுடன் ராசாத்தி வந்தாள். எங்க ராசாத்தி ஆளைக் காணும்னு கேட்டேன். எனக்கு கல்யாணம், அதுக்குதான் உன்னைக் கூட்டிட்டுப் போக வந்தேன் என்று சொன்னாள். எனக்கு பயம். அம்மாவிடம் கேட்டதற்கு அம்மா பயப்படாதே, அவளோட மாமனுக்கு அவளை கல்யாணம் பண்ணி வெக்கறாங்க என்று அம்மா சொன்னதும்தான் நிம்மதி. இந்த வயசுல கல்யாணமான்னு மட்டும் தோணிச்சு.

Image may contain: 1 person, smiling

கல்யாணத்துக்கு போனோம். குழந்தைக்கு புடவை கட்டினா மாதிரி இருந்தது. அப்பவும் குறும்பு மாறாமல் தன் புருஷனிடம், "இந்த மைனரைத்தான் கட்டிக்கலாம்னு இருந்தேன், இது மாட்டேன்னுடிச்சி, அதான் உங்களைக் கட்டிகிட்டேன்" என்று சொன்னாள். அவள் புருஷனுக்கும் எங்கள் குடும்பத்தை நன்கு தெரியும், அவரும் என்னைப் பார்த்து பலமாக சிரித்தார்.

அப்புறம் மாதம் ஒரு முறை வந்து போவாள். பிறகு அது தேய்ந்து வருடம் 3 முறை என்று ஆயிற்று. தங்க சிலை மாதிரி இருந்தவள், அலங்காரம் செய்யாத அம்மன் போல களையிழந்து தோற்றமளிப்பாள். எங்கள் அம்மாவிடம் எதோ சொல்லி அழுவாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. கொஞ்சம் வளர்ந்த பிறகுதான் தெரிந்தது அவன் ஒரு குடிகாரன் என்று. வேலைக்கு செல்வான், இவளை துன்புறுத்த மாட்டான், ஆனால் பைசா தரமாட்டான் வீட்டிற்கு. இருக்கின்ற நிலத்தில் விவசாயம் செய்து அவள் தன் இரண்டு பையன்களையும் பெண்ணையும் வளர்த்தாள்.

வருடங்கள் உருண்டோடின. நாங்கள் சென்னை வந்து குடியேறி விட்டோம். என் அப்பா, தொடர்ந்து அம்மா மறைவு என்று சொந்த ஊருக்கு செல்வது குறைந்து விட்டது. என்னுடைய திருமண வாழ்வும் சரியாக இல்லை. 2010ல் ஒரு நாள் எதோ தோன்ற சொந்த ஊருக்கு சென்றேன். நண்பர்களை சந்தித்தேன், ராசாத்தி வீட்டிற்கும் சென்றேன். அவள் புருஷன் இறந்து விட்டிருந்தார். குடிதான் காரணம். ஆனால் ஒரு கோடி மதிப்புள்ள நிலங்கள் விட்டு சென்றிருந்தார். அரசு மருத்துவமனையில் டிரைவராக இருந்தபோது இறந்து விட்டதால் இழப்பீடும், ஓய்வூதியத் தொகையும் வேறு இவளுக்கு வந்தது. அவள் முகத்தில் சிறிதும் சோகம் இல்லை. ஞானியைப் போல இருந்தாள்.

"என்ன ராசாத்தி, உன் புருஷன் உன்னை இப்படி விட்டுவிட்டு போயிட்டாரே" என்று கேட்டேன். அதற்கு அவள் சொன்னாள், பெரிய அளவில் தனக்கு எதுவும் துக்கமில்லை என்று. ஏன் என்று கேட்டேன். அதற்கு அவள் "அவர் ஒரு ஜென்டில்மேனா இருந்தாரு" என்றாள். புரியாமல் பார்த்தேன், குடியும் குடுத்தனமுமாக (வேறு சில தொடர்புகள்) இருந்தார் என்றாள். ஜென்டில்மேனுக்கு அவள் சொன்ன விளக்கத்தைக் கேட்டு எனக்கு சிரிப்பு வந்தது.

"ராசாத்தி, நீ சொன்ன மாதிரி என்ன கல்யாணம் பண்ணிட்டிருந்தா, இப்ப இப்படி ஆயிருக்குமா?" என்று கேட்டேன்.

"ஆமாடா, உனக்கும் இந்த பிரச்சினை வந்திருக்காது" என்றாளே பார்க்கலாம்.

No comments:

Post a Comment