Sunday, June 10, 2018

அம்மா ஏன் அழுதாள்?

"அம்மா ஏன் அழுதாள்?"

"அம்மா, நாளைக்கு கார்த்திகைக்கு எல்லா பட்சணமும் செய்வியாம்மா"
"ஆமாண்டா, நீ போய் சமத்தா விளையாடு"

ரொம்ப சந்தோஷமாயிருந்தது. அக்கா கிட்டயும் அண்ணா கிட்டயும் போய் மறுநா என்ன செய்யலாம், பட்டாசு எப்ப கொளுத்தலாம்னு பிளான். அக்கா கிட்ட மறுநா போட்டுக்க நல்ல ட்ரஸ் எடுத்து வைன்னு சொன்னேன். எல்லாம் ரெடிடான்னு சொன்னா. 

சின்ன வயசுல தீபாவளிக்கப்பறம் புள்ளையார் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, கார்த்திகை இது மூணும்தான் ரொம்ப சந்தோஷமா இருக்கும், ஏன்னா நெறைய பட்சணம் கெடைக்கும். கார்த்திகைக்கு கூடுதலா பட்டாசு வேற. அதுனால ரொம்ப சந்தோஷமா இருந்தது. அண்ணாவும் அக்காவும் ஸ்கூல்ல படிக்கறதால வீட்டுப் பாடம் எல்லாம் எழுத ஆரம்பிச்சா. நான் அவா பொஸ்தகத்த வெச்சு பொம்மை பாத்துண்டிருந்தேன். அவா முடிச்சப்பறம் எல்லாம் வெளில போயி ஃப்ரெண்ட்ஸோட வெளையாடினோம். 8 மணிக்கு வீட்டுக்கு வந்து சாப்பிட்டோம். வெளில போன அப்பா இன்னும் வரல. அவர் வருவார்னு காத்துண்டிருந்தோம். 

அப்பா 9 மணிக்கு வந்தா. வரும்போதே கொஞ்சம் டயர்டா இருந்தா. அம்மா கிட்ட ஒரு 5 ரூபாய நீட்டி இத காசு டப்பால வெய்யின்னு சொன்னா. நான் வெக்கறேன்னு கேட்டேன், வேண்டாம் நீ சின்னப் பையன், எங்கவாவது கீழ போட்டுடுவேன்னு சொல்லி என் அண்ணா கிட்ட குடுத்தா. எனக்கு ரொம்ப அழுகையா போச்சு. 

அப்பா வெளிலேர்ந்து வந்த களைப்பு தீர ஒரு துண்ட தண்ணில நனச்சு ஒடம்ப தொடச்சுண்டு சாப்பிட ஒக்காந்தா. அண்ணா மறுபடி வெளையாட போயிட்டான். அக்கா அம்மாக்கு ஒத்தாசையா அப்பாவுக்கு பரிமாற போனா. நான் மட்டும் தனியா இருந்தேன். மனசுல இன்னும் நம்ம கிட்ட குடுக்கலியே அந்த பேப்பர (காசுன்னா புரியாத வயசு) அப்படிங்கற துக்கம் தீரல. திடீர்னு ஒரு யோசன. நம்மள சின்னப் பயன்னுதானே குடுக்கல. அத எடுத்து தூக்கி எறிஞ்சுடுவோம்னு நைசா சாமி ரூம் போயி காசு டப்பால இருந்து அத எடுத்துண்டு ஜோபில வெச்சுண்டு ரோட்டுக்கு வந்தேன். அதை எடுத்து தூக்கிப் போடப் போகும்போது இன்னொரு யோசன, இதை தேடிக் கண்டு புடிச்சுட்டா அப்படின்னு. அதுனால அத சுக்கு நூறா கிழிச்சு பெரிய சாக்கடைல போட்டேன். நைசா வீட்டுக்கு வந்துட்டேன்.

சாப்பிட்டுட்டு அப்பா நான் இப்பவே போய் வெல்லம், பருப்பு எல்லாம் வாங்கிண்டு வந்துடறேன், அந்த காச எடுன்னு சொன்னா அம்மா கிட்ட. அம்மா போயிப் பாத்தா அதுல இல்ல, அப்பாக்கும் அம்மாக்கும் ஒரே ஷாக். எல்லா எடத்துலயும் தேடினா. எங்க எல்லாரயும் விசாரிச்சா. எங்க அண்ணா, "அம்மா, இவன் அந்த சாக்கடை கிட்ட போயி எதையோ தூக்கிப் போட்டான், நான் வெளயாடறப்ப கவனிச்சேன், ஒடனே உள்ள வந்துட்டான்"னு சொன்னான். எங்கிட்ட எல்லாரும் கேட்டா, நான் சொல்லல. மொதல்ல தன்மையா கேட்டா, அப்பறம் மெரட்டிக் கேட்டா, கடைசில அம்மா கெஞ்சினா, என்னால பொறுக்க முடியல, அந்த பேப்பர கிழிச்சு சாக்கடல போட்டேன்னு சொன்னேன். எல்லாரும் டார்ச் எடுத்துண்டு ரொம்ப நேரம் தேடினா. அப்பாவுக்கு மூஞ்சி இருண்டு போச்சு. அம்மாவுக்கு அழுகை.
No automatic alt text available.

வீட்டுக்குள்ள வந்தவொடனே அப்பா சட்டய மாட்டிண்டு மறுபடியும் வெளிய போனா. அம்மா என்னக் கட்டிப் புடிச்சுண்டு ஓன்னு அழுதா. எனக்கு ஒன்னும் புரியல. ஒரு பேப்பர கிழிச்சதுக்கு ஏன் அம்மா அழறான்னு. அப்பறம் ராத்திரி 10 மணிக்கு மேல அப்பா வந்தா. என்கிட்டே ஒரு பேப்பர நீட்டி இத பத்திரமா காசு டப்பால வைன்னு குடுத்தா. நானும் வெச்சுட்டு வந்தேன். யாரும் எதுவும் பேசல. எல்லாரும் படுத்துண்டு தூங்கிட்டோம்.

எனக்கு மட்டும் தூக்கம் வரல. ரொம்ப நேரம் அம்மா ஏன் அழுதான்னு யோசிச்சிண்டிருந்தேன். புரியல. உங்களுக்கு தெரியுமா அம்மா ஏன் அழுதான்னு?



No comments:

Post a Comment